Wednesday, June 20, 2012

Moral Stories in Tamil # 20 - Meera

அவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே !

பக்தமீரா மிகப்பெரிய கிருஷ்ணபக்தை. அழகு அவளோடு ஒட்டிப் பிறந்தது. அவளை அவ்வூரிலுள்ள ஒரு இளைஞன் எப்படியாவது அடைந்து விட வேண்டுமெனத் துடித்தான். தனிமையில் இருந்த அவளிடம், ""நீ எனக்கு வேண்டும்,'' என வாய் கூசாமல் சொன்னான்.சாதாரணப் பெண் என்றால் என்ன செய்திருப்பாள்? ஒன்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டியிருப்பாள் அல்லது அவனை <உதைத்து அனுப்பியிருப்பாள். மீரா இந்த இரண்டையுமே செய்யவில்லை. கேட்டவனே அதிரும்படியாக, ""அவ்வளவு தானே! நாளை என்னை எடுத்துக்கொள்,'' என்றாள்.

""எங்கே, எப்போது வர வேண்டும்?'' அவன் அவசரமாய் கேட்டான். ""நாளை மாலையில் குளக்கரைக்கு வா,' 'என்று அவள் சொல்லவும் கிளம்பிவிட்டான். மறுநாள் மாலையில் குளக்கரைக்கு வந்தான். மீராவைச் சுற்றி பல பக்தர்கள் அமர்ந்திருக்க, அவள் கிருஷ்ணகானம் இசைத்துக் கொண்டிருந்தாள். பஜனை முடியும் வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த அவன், ""என்னை வரச்சொல்லிவிட்டு இப்படி செய்யலாமா?'' என்றான். ""உனக்கு தேவை இந்த உடல் தானே எடுத்துக் கொள்,'' என்றாள் அவள்.


""இத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! இங்கே எப்படி முடியும்?'' என்றவனிடம், ""சரி...இந்த சாதாரண மனிதஜென்மங்கள் பார்ப்பார்கள் என்பதற்கே வெட்கப்படுகிறாயே! எங்கும் நிறைந்திருக்கும் கண்ணன் நாம் ஒளிந்திருக்கும் இடத்திலும் இருந்து பார்ப்பானே! அப்போது உனக்கு வெட்கமாக இருக்காதா!'' என்றாள். வந்தவனுக்கு சுருக்கென்றது. தன் எண்ணத்தை கைவிட்டான். மனம் திருந்தியவனாய் திரும்பினான்.

Cheers! 

Tuesday, June 19, 2012

Moral Stories in Tamil # 19 - Be Patient

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

தேசப்பிதா காந்திஜி ஒருமுறை லண்டனுக்கு கப்பலில் பயணம் செய்தார். ஒரு வெள்ளையன் அவர் எதிரே வந்து அமர்ந்து கொள்வான். எந்நேரமும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டே இருந்தான். சகிப்புத்தன்மை கொண்ட கருணாமூர்த்தியல்லவா காந்தி மகாத்மா! அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. இப்படி அவர் பொறுமையாய் இருந்ததே அவனது கோபத்தை கிளறியது.

மறுநாளில் இருந்து அர்ச்சனையை அதிகமாக்கி விட்டான். தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினான். குளிர்நிலவைப் பார்த்து நாய் குரைத்தால் யாருக்கு நஷ்டம்... காந்திஜி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
ஒருநாள், அந்த வெள்ளையனுக்கு ஏதோ ஒரு அவசர வேலை. அதனால், தான் திட்ட வேண்டியதையெல்லாம் சில காகிதங்களில் எழுதி, அவர் கையில் திணித்து விட்டுப் போய்விட்டான்.
 
வேலை முடிந்த பிறகு திரும்பி வந்தான். அப்போதும் காந்திஜி "சாந்தி..சாந்தி..சாந்தி' என அமைதி தவழும் முகத்துடன் காட்சியளித்தார். அவனுக்கோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
 
""என்ன! நான் கொடுத்ததைப் படித்தீரா!'' என்றான். காந்திஜி அவனை ஏற இறங்க பார்த்தார். ஒரு திசை நோக்கி கை நீட்டினார். அங்கே ஒரு குப்பைக்கூடை இருக்கிறது. ""உம் கடிதம் அதோ அதில் பத்திரமாக இருக்கிறது.'' என்றார்.
 
அவன் முகம் சிவந்தது. பற்களை கடித்தபடியே, ""அதில் உமக்கு பயன்படும்படியாக எதுவுமே இல்லையோ?'' என்றான் காட்டமாக. ""இருந்ததே!'' என்ற காந்திஜி அமைதியாக கையை விரித்தார். அவன் காகிதங்களைக் குத்திக் கொடுத்த குண்டூசி இருந்தது''.
 
அதற்கு மேலும் அங்கு நிற்க அவன் பைத்தியக்காரனா என்ன! ""போற்றுவார் போற்றலும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே'' என்ற கீதை வரிகளைப் படித்தவரல்லவா நமது மகாத்மா... ஆம்..பொறுமைக்கு மிஞ்சிய ஆயுதம் உலகில் எதுவுமே இல்லை. 

Cheers!

Monday, June 18, 2012

Moral Stories in Tamil # 18 - Opportunities

சந்தர்ப்பத்தை சிக்கென பிடி! 
 
ஒரு பெரிய ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படவே நடுவழியில் திடீரென கவிழ்ந்தது. படகில் இருந்த பலர் மூழ்கி விட, நீச்சல் தெரிந்த இரண்டு ஆண்களும், படகோட்டியும் மட்டும் தப்பி, ஒரு பாறையில் ஏறி நின்று கொண்டனர்.
 
அப்போது, இன்னொரு படகு வந்தது.
 
""ஏறுங்கள், ஏறுங்கள்! வெள்ளம் அதிகமானால் மேலும் ஆபத்து. உங்களை கரை சேர்த்து விடுகிறேன், வாருங்கள்,'' என்றான் அதை ஓட்டி வந்தவன்.
படகோட்டியும், தப்பி நின்ற ஒரு பயணியும் மட்டும் அதில் ஏற, இன்னொருவன் வர மறுத்தான்.
 
பயணி அவனிடம்,""வந்து விடு! இதுதான் சந்தர்ப்பம், தப்பி கரைக்கு போய் விடலாம்,'' என்றான்.
 
""வேண்டாமப்பா! இந்தப் படகும் கவிழ்ந்தால் நிலைமை என்னாவது! நான் வரவில்லை. வெள்ளம் வற்றிய பிறகு தான் வருவேன்,'' என்று அடம்பிடித்தான்.
 
படகு கிளம்பி விட்டது. அவர்கள் கரையேறி தப்பித்தனர். வெள்ளம் அதிகமாகவே பாறையே மூழ்கி அதில் நின்றவன் மூழ்கிவிட்டான்.
வாழ்க்கையில் எப்போதாவது தான் நல்ல சந்தர்ப்பம் வரும். குறிப்பாக மாணவர்கள் படிக்கும் காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். இளமையை வீணாக்கிவிட்டால், வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினமாகி விடும்...சரிதானே! 

Cheers!

Sunday, June 17, 2012

Moral Stories in Tamil # 17 - Recite Slokas

சுற்றுச்சூழலையே மாற்றுங்க!  

சங்கீதன் மிகப்பெரிய தர்மவான். ஆனாலும், மனதில் அமைதியில்லை. காரணம் அவன் செய்த தர்மத்தை ஊரில் பலர் கேலி செய்ததும், பொறாமை கொண்டதும் தான்.

ஒருமுறை, ஒரு பெரியவர் அவன் இல்லத்துக்கு வந்தார். அவருக்கு உணவளித்த சங்கீதன், ""ஐயா! எவ்வளவு தர்மம் செய்தாலும், என் மனதில் அமைதியில்லை. என்னைச் சுற்றியுள்ளவர்கள் பொறாமைப்படுகின்றனர். கேலி செய்கின்றனர். இதனால் என் மனஅமைதி பாதிக்கப்படுகிறது,''என்றான்.
""இவ்வளவுதானா? இதற்காகவா கவலைப்படுகிறாய்,'' என்ற பெரியவர், 

சங்கீதா! அதுபற்றி நீ கவலைப்படாதே. நான் சில ஸ்லோகங்களை உனக்கு எழுதித்தருகிறேன். அவற்றை நீ தினமும் விடாமல் வாசி,'' என்றார்.
சங்கீதனும் அவர் எழுதிக் கொடுத்ததை வாசித்தான். அவனை விமர்சித்தவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். பலர் அவனைப் போலவே தர்மம் செய்ய ஆரம்பித்தனர். அந்த இடத்தின் சூழலே மாறிப் போனது.
 
ஸ்லோகங்களுக்கு அளப்பரிய சக்தி உண்டு. உங்கள் இல்லங்களிலும், கோயில்களிலும், ஊர் பொது இடங்களிலும் ஸ்லோகங்கள் ஒலிக்கட்டும். சுற்றுச்சூழல் கூட மாறி விடும். 

Cheers!

Saturday, June 16, 2012

Moral Stories in Tamil # 16 - Cannot cheat all the time

நமக்கு மேலே ஒருவன் 
 
யார் ஒருவன் தன்னை பலசாலி என்றும், புத்திசாலி என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக ஒரு அடி இருக்கிறது. ஏனென்றால், மனிதரில் பாயும் புலிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பாய்கின்ற தூரத்தில் தான் வித்தியாசம்...

ஒரு ஊரில் மகாபுத்திசாலியான திருடன். திருட்டில் எத்தனை "டெக்னிக்' உண்டோ, அத்தனையையும் பயன்படுத்தி, எவ்வளவு கவனமாக இருக்கும் ஆசாமியிடமும் திருடி விடுவான். போலீசிடம் சிக்காமலே காலத்தை கழித்துக் கொண்டிருந்தான்.
 
ஒருநாள், ஒரு சிறுவன் ஒரு கிணற்றுப்பக்கமாக நின்று அழுது கொண்டிருந்தான்.
 
அந்தப்பக்கமாக, திருடன் அன்று கொள்ளையடித்த பொருள் அடங்கிய மூடையுடன் வந்து கொண்டிருந்தான்.

அழுகிற பையனிடம், ""ஏண்டா அழறே! என்னாச்சு,'' என்றான்.
 
""அண்ணே! எங்கம்மா எங்கிட்ட ஒரு வெள்ளிச்செம்பைக் கொடுத்து பால் வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நான் இந்த கிணற்று சுவர் மேலே செம்பை வச்சுட்டு, இந்த மரத்திலே இருக்கிற மாங்காயைப் பறிக்க கல் வீசிட்டு இருந்தேன். திடீர்னு காத்தடிச்சு செம்பு கிணத்துக்குள்ளே விழுந்து மூழ்கிட்டுது. செம்பு இல்லாம போனா, எங்க அம்மா தோலை உரிச்சுடுவா,'' என்றான்.
 
திருடனுக்கு புத்தி எப்படி போகும்? ஆஹா...வெள்ளிச் செம்பாயிற்றே! அரைகிலோ வெயிட்டாவது இருக்குமே! கிராம் 70 ரூபாய்க்கு விற்குதே! அதை எப்படியும் அசத்தி விடுவதென முடிவுசெய்து, ""சரிப்பா! அழாதே, நான் கிணற்றுக்குள் போய் எடுத்துட்டு வந்துடறேன்,'' என தான் கொண்டு வந்த மூடையை கிணற்றுச் சுவரில் வைத்து விட்டு குதித்தான்.
 
உள்ளே எதுவும் சிக்கவில்லை. மேலே வந்தான். பையனையும் காணலே, தங்கநகைகள் கொண்ட மூடையையும் காணலே! புத்திசாலியான தன்னை ஏமாத்திப்புட்டானே ஒரு பொடிப்பயல்,'' என நொந்தபடியே சென்றான்.
நாம் மட்டுமே புத்திசாலி என நினைத்துக் கொண்டு, பிறரை ஏமாற்றினால், நம்மை ஏமாற்ற இன்னொரு மகாபுத்திசாலி வருவான். புரிகிறதா! 

Cheers!

Friday, June 15, 2012

Moral Stories in Tamil # 15 - Be satisfied with what you have

கிடைப்பதைக் கொண்டு வாழ்வோம் 
""இந்த அரசியல்வாதி அநியாயமாக கொள்ளையடித்து சேர்த்திருக்கிறார். இதற்கு இறைவனும் துணை போகிறானே,'' என்று புலம்புவோர் ஒருபுறம். ""அவனுக்கு மட்டும் பங்களா, கார், ஏசி என இறைவன் கொடுத்துள்ளான். எனக்கு பழையசாதம் சாப்பிடக்கூட விதியில்லையே,'' என புலம்புவோர் மறுபுறம்.

மூன்று சகோதரர்கள் ஒரு காட்டுப்பாதையில் சென்றனர். ஒருமுனிவரைப் பார்த்தனர். அவர்களை ஆசிர்வதித்த அவர், ஆளுக்கொரு தர்ப்பையைக் கொடுத்து, ""இதையில் தலையில் வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். எந்த இடத்தில் விழுகிறதோ, அந்த இடத்தில் உங்களுக்கு தேவையான பொருள் கிடைக்கும்,'' என்றார். சகோதரர்கள் நடந்தனர். மூத்தவனின் தர்ப்பை ஓரிடத்தில் விழவே, அங்கு தோண்டினர். உள்ளே வெள்ளி இருந்தது. முடிந்தளவுக்கு எடுத்துக் கொண்டு அவன் திரும்பி விட்டான். இரண்டாமவன் தலையில் உள்ளது கீழே விழவே, அங்கு தங்கமே கிடைத்தது.
 
அவன் தன் தம்பியிடம்,""நீயும் இந்த தங்கத்தை எடுத்துக் கொள்,'' என்றான். அவனோ, ""முதலில் வெள்ளி, இப்போது தங்கம். நான் இன்னும் கொஞ்சம் போனால் இன்னும் உயர்ந்த பொருள் கிடைக்கும்,'' என்று நடந்தான். தர்ப்பை விழுந்த இடத்தை தோண்டினால், செப்புக்கட்டிகளே கிடைத்தது.
எனவே, அவன் மீண்டும் தங்கம், வெள்ளி கிடைத்த இடத்துக்கு ஓடினான். அங்கே எதுவுமே தென்படவில்லை. செப்புக்கட்டிகளையாவது அள்ளுவோம் என திரும்பினால், அவையும் மாயமாகி இருந்தன.
 
அவரவர்க்கு இறைவன் என்ன தர விரும்புகிறானோ அதுவே கிடைக்கும். அடுத்தவர்களை விட உயர வேண்டுமென்ற பேராசைப்பட்டால் இருப்பதையும் இழந்து விடுவோம். 

Cheers!

Thursday, June 14, 2012

Moral Stories in Tamil # 14 - Victory is Yours

வெற்றிக்கனி உங்கள் கையில் 

என்ன வேலை செஞ்சு என்ன பிரயோஜனம்! கஷ்டப்பட்டு உழைச்சேன்! பத்து பைசா வருமானம் உண்டா! உம்...'' என்று பெருமூச்சுடன் "உச்' கொட்டுபவர்கள் ஏராளம்.

இப்படிப்பட்ட நபர்களைப் பார்த்தார் ராபர்ட் ரிப்ளி என்னும் எழுத்தாளர். அமெரிக்காவைச் சேர்ந்தவர். "பீலிவ் இட் ஆர் நாட்' (நம்பினால் நம்புங்கள்) என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார்.
 
அதில் அவர் சொல்கிறார். நான்கு பேர் ஆளுக்கொரு இரும்புத்துண்டை 250 ரூபாய்க்கு வாங்கினர்.
 
ஒருவன், அதை ஏதோ சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினான். இன்னொருவன் அதை உருக்கி, குதிரைக்கு லாடம் செய்தான். அதை 2500 ரூபாய்க்கு விற்றான். இன்னொருவன் தையல் இயந்திரத்துக்கு தரமான ஊசிகள் செய்தான். அவை 2.5 லட்சம் ரூபாய்க்கு விலை போயின. இன்னொருவன் அதையே சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்றுக்கு ஸ்பிரிங்குகளாகச் செய்து இரண்டரை கோடிக்கு விற்று லாபம் சம்பாதித்தான்.
ஆக, இரும்புத்துண்டு ஒன்று தான். அதை விதவிதமாக வடிவமைக்கும்போது, அதன் மதிப்பு பலமடங்கு பெருகுகிறது. இரும்பை வாங்கிய ஒருவன் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை. எதற்காக வாங்கினானோ, அந்த வேலையை மட்டும் செய்து விட்டு ஒதுங்கி விட்டான். அதேபோன்ற இரும்புத்துண்டை வாங்கிய மற்ற மூவரும் அவரவர் சிந்தனை, திறமையைப் பொறுத்து ஆயிரம், லட்சம், கோடிகளாக மாற்றினர்.
 
நம் எல்லாருக்கும் திறமை ஒளிந்து கிடக்கிறது. அதை நாம் தான் வெளிப்படுத்த வேண்டும். சிந்திக்கும் திறன் மட்டும் வாழ்வை மாற்றிவிடாது. சிந்தனையை தைரியத்துடன் செயல்படுத்துவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். இதற்கு கடவுளின் அனுக்கிரகமும் தேவை.
 
எனவே, காலையில் எழுந்ததும், ""நான் இன்று இன்ன வேலை செய்யப்போகிறேன், அதை நிறைவேற்ற நீ என்னோடு இரு,'' என்று கடவுளை வேண்டியபிறகு பணிகளைத் துவக்குங்கள்! கடவுள் உங்கள் பக்கம் நிச்சயம் இருப்பார். நீங்கள் வெற்றிக்கனிகளைப் பறித்து தள்ளூவீர்கள். 

Cheers!

Wednesday, June 13, 2012

Moral Stories in Tamil # 13 - Handle Life's challenges boldly

பிரச்னைகளை எதிர்த்து நில்


முருகனுக்கு பெரும் பணம் இருந்தது. அவனுடைய அப்பா சொத்து, சுகத்தையெல்லாம் விட்டு தான் சென்றிருந்தார். பணத்துக்கு குறைவே இல்லை. ஆனால், என்ன செய்வது? வாய்த்தவள் சரியில்லை. இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களும் அம்மாவுடன் சேர்ந்து, அப்பாவின் சொல்லுக்கு மாறாக ஏறுக்கு மாறாக பேசி வந்தார்கள். இதனால், முருகனுக்கு நிம்மதி போய்விட்டது.

ஒருநாள், அவனைப் பார்க்க அவனது தந்தையின் நண்பர் வந்தார். முருகன் தனது நிலையை அவரிடம் சொல்லி அழுதான். ""எனக்கு நிம்மதியே இல்லை,'' என்று புலம்பினான். அவனது நிலை பரிதாபகரமாக தோன்றினாலும், அவனது நலன் கருதி ஒரு பாடத்தையும் கற்பிக்க நினைத்தார் பெரியவர்.
 

""முருகா! இதற்காக நீ கவலைப்படாதே. உனக்கு நிம்மதி வேண்டும்! அவ்வளவுதானே! அப்படிப்பட்ட ஓர் இடத்தைக் காட்டுகிறேன். அங்கு வந்தால், உனக்கு எந்தத்துன்பமும் இல்லை,'' என்றார்.
 

முருகனுக்கு ஏக மகிழ்ச்சி! உடனடியாக அவருடன் கிளம்பிவிட்டான்.
 

அவர் அவனை நேராக இடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒன்றும் புரியாமல் விழித்த முருகன், ""இங்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்?'' என்றான்.
 

""நீ தானே நிம்மதியை விரும்பினாய். உலகத்தில் மனிதனாய் பிறப்பவன் நிம்மதியாய் உறங்குவது இங்குள்ள கல்லறைகளுக்குள் தான். அவன் உலகில் வாழும்வரை பிரச்னைகள் தொடரத்தான் செய்யும். அதைக் கண்டு பயந்தால், மேலும் மேலும் நிம்மதி குலையும். அவற்றை எதிர்த்து நிற்பவனை நிம்மதி தேடி வரும். அந்த சிவனைப் பார்த்தாயா! நிம்மதியான இடம் இதுதான் என்று, மயானத்திலேயே குடியிருக்கிறான். இப்போது சொல்! நீ பிரச்னைகளை சமாளித்து நிம்மதியைத் தேடப் போகிறாயா...இல்லை, இங்கே தோண்டப்பட்டுள்ள குழிகளுக்குள் புதைந்து கொள்ளப் போகிறாயா?'' என்றார்.
முருகனுக்கு புத்தி வந்தது.
 

""உண்மை தான்! நான் எனக்கு மட்டுமே பிரச்னைகள் இருக்கிறது என நினைத்தேன். உலகில் ஒவ்வொருவரும் பிரச்னையுடன் தான் இருக்கிறார்கள். பிரச்னைகளைக் கண்டு ஓடக்கூடாது. நம் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் புத்தி சொல்வோம், கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் பட்டு திருந்தட்டும்,'' என விட்டுவிட்டான். இப்போது, அவன் நிம்மதியாக இருக்கிறான். 

Cheers!

Tuesday, June 12, 2012

Moral Stories in Tamil # 12 - Guru Bakthi

பிடிக்காத வார்த்தை "தயக்கம்'

தான் பெற்ற பிள்ளைகளை விட, சீடர்கள் மீது குருநானக் மிகுந்த அன்பு செலுத்தினார். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை.

ஒரு மகன் சொன்னான், ""பெற்ற பிள்ளையை விட சீடர்களை உயர்வாக மதிக்கிறார் என்றால், அதில் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டுமே! அதைக் கண்டுபிடியுங்கள்,'' என்று.
 
எவ்வளவோ ஆய்வு செய்து பார்த்தார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தையிடமே கேட்டு விடுவதென முடிவு செய்தார்கள்.
 
""அப்பா! நீங்கள் செய்வது முறையா? பெற்ற பிள்ளைகளை விடவா சீடர்கள் உங்களுக்குப் பெரிதாகி விட்டார்கள்!
 
அப்படியென்ன உங்களுக்கு நாங்கள் வேண்டாதவர்களாகி விட்டோம்!'' குருநானக் புன்னகைத்தார். பதிலேதும் சொல்லாமல், ஒரு கிண்ணத்தைத் தூக்கி அருகிலிருந்த சாக்கடையில் எறிந்தார். கிண்ணம் மூழ்கி விட்டது. ""அதை எடுத்து வாருங்கள்,'' என்று கட்டளையிட்டார்.
 
ஒரு வேலைக்காரனை விட்டு அதை எடுத்து வந்து கொடுத்தார்கள் பிள்ளைகள்.
 
அந்தக் கிண்ணத்தை திரும்பவும் சாக்கடையில் எறிந்தார்.
 
"இவருக்கு என்னாயிற்று' என்று பிள்ளைகள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு சீடரை அழைத்து அதை எடுத்து வரச்சொன்னார்.
 
அவர் சற்றும் யோசிக்கவில்லை. சாக்கடைக்குள் குதித்தார். கிண்ணத்தை தேடி எடுத்து கழுவி, குருவின் கையில் ஒப்படைத்தார்.
 
இப்போது குருநானக் ஏறிட்டு பார்த்தார். பிள்ளைகள் அங்கே இல்லை....

Cheers!

Monday, June 11, 2012

Moral Stories in Tamil # 11 - Marriage

அனுசரித்து வாழுங்க! 
 
சாம்பு! நம்ம வாசுதேவன் வீட்டிலே ஒரே ரகளை. புருஷன், பெண்டாட்டிக்குள் பெரிய போர்க்களம்,'' என்ற நண்பர் விஸ்வநாதனிடம், ""ஏன்! என்ன பிரச்னை அவர்களுக்குள்?'' என்றார் சாம்பு.

""பணப்பிரச்னை தான். இருவருமே சம்பாதிக்கிறார்கள், பணத்தை யார் செலவிடுவது? எப்படி செலவிடுவது என்பதில் தான் புகைச்சல். உன்னை அங்கே அழைத்து வரச்சொன்னான். நீ போய் அவர்களைச் சமாதானம் செய்து வை,'' என்றார் விஸ்வநாதன்.

வாசுதேவனுக்கும், அவர் மனைவி கலாவுக்கும் மிகவும் பரிச்சயமானவர் என்ற முறையில் சாம்புவும் அவர்கள் வீட்டுக்குச் சென்றார். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் இருவரும் இணைந்து அவரை வரவேற்றனர்.

""சாம்பண்ணா! ஏதாச்சும் சாப்பிடுங்களேன்,'' என்று வற்புறுத்தினாள் கலா.
 
""ஏம்மா தங்கச்சி! உன் வீட்டில் சாப்பிடுறது இருக்கட்டும், இரண்டு பேரும் ஏதோ பண விஷயமா சண்டை போட்டீங் களாமே! விச்சு வந்து சொன்னான். உங்களுக்குள் என்ன பிரச்னை?'' என்று கேட்டாரோ இல்லையோ, இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் புகார் சொன்னார்கள். அவர்களை அமைதிப்படுத்திய சாம்பு, ""கொஞ்சம் உட்காருங்க. ஒரு கதை சொல்றேன். அதைக் கேட்டுட்டு முடிவுக்கு வாங்க,'' என்றார் சாம்பு. இருவரும் பொறுமையாக அமர்ந்தனர்.
 
""ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். கொஞ்சம் அறிவு போதாது. சம்பாதித்ததை கோட்டை விடுவதில் அவனுக்கு நிகர் அவன் தான். ஒருநாள் அவன் ஒரு காளையுடன் சந்தைக்கு போனான். அதை ஒருவரிடம் விலை பேசிக்கொண்டிருந்த போது, ஒரு ஆடு வியாபாரி வந்தான்.

""அடேய்! மாட்டை என்னிடம் கொடுத்து விடு. பதிலாக, இந்த ஆட்டை வைத்துக்கொள். வளர்ப்பது ரொம்ப சுலபம், வருஷத்துக்கு இரண்டு குட்டி போடும். போதாக்குறைக்கு பால் வேறு தரும். இதை வைத்து நிறைய சம்பாதிக்கலாம்,'' என்றான். அவன் ஆட்டைவாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கோழி வியாபாரியை பார்த்தான்.

அவன் சில கோழிகளை அவனிடம் கொடுத்து, ""கோழி வளர்ப்பது ஆடு வளர்ப்பை விட சுலபம், தினமும் முட்டை, கடைசியில் இறைச்சிக்கும் விற்று விடலாம். வருஷத்துக்கு இருபது, இருபத்தைந்து குஞ்சு பொரிக்கும். அதை வளர்த்தால் முட்டையும் கூடும், குஞ்சும் கூடும்,'' என்று ஆசை காட்ட, அவனிடம் ஆட்டைக் கொடுத்து விட்டு கோழியுடன் சென்றான்.
ஓரிடத்தில் ஒருவன் அவனை மடக்கி, பத்து முட்டையைக் கொடுத்து, ""கோழியை வளர்ப்பது பெரிய தொந்தரவு. அங்கங்கே பறக்கும். யார் வீட்டு வைக்கோல் போரிலாவது முட்டை போடும். திருடர்கள் பிடித்துச் சென்று சமைத்து விடுவார்கள். இந்த முட்டை அப்படியல்ல, அப்படியே சமைத்து சாப்பிடலாம்,'' என்றான். அந்த முட்டாளும் வாங்கிக் கொண்டான். வீடு வந்து சேர்ந்தான். அவனை அவனது மனைவி பாராட்டினாள்,'' என்றவரை இடைமறித்தான் வாசுதேவன்.

""அவன் கொடுத்து வைத்தவன். தப்பே செஞ்சாலும் பெண்டாட்டி பாராட்டுறாளே,'' என்று குத்தலாகப் பேசியவன் லேசாக கலா பக்கம் திரும்ப அவள் முறைத்தாள். இதைக் கவனித்த சாம்பு கண்டுகொள்ளாமல் கதையைத் தொடர்ந்தார். அவனை பார்க்க வந்து காத்திருந்த ஒரு நண்பன், ""மாட்டோடு போனவன் முட்டையோடு வந்தும் உன் மனைவி பாராட்டினாளே! ஆச்சரியமா இருக்கே,'' என்றான்.

அதற்கு அவன்,""என் மனைவி மற்றவர்கள் முன்னால் என்னைத் திட்டமாட்டாள். தனித்தே அறிவுரை சொல்வாள். இதனால் எங்களுக்குள் பிரச்னையே வந்ததில்லை,'' என்று முடித்த மாமா, ""கலா! நீயும், வாசுவும் விஸ்வநாதன் முன்னால் சண்டை போட்டதால் தான் உன் குடும்ப விஷயம் அவனுக்குத் தெரிந்தது. நானும் கதை சொல்ல வேண்டி வந்துவிட்டது,'' என்றார்.
 
கலாவும், வாசுவும் தலை குனிந்தனர்.
 
""அண்ணா! வேடிக்கையான கதையாக இருந்தாலும் இரண்டு பேருக்கும் நல்லபுத்தி வர்ற மாதிரி சொன்னீங்க! இனி நாங்க அனுசரித்து செல்வோம்,'' என்ற கலாவுக்கு வாழ்த்துச் சொன்னார் சாம்பு.

Cheers!

Sunday, June 10, 2012

Moral Stories in Tamil # 10 - Good lesson

இப்படியும் பாடம் கற்பிக்கலாம்

ஒரு தாசில்தார் ரொம்ப ரொம்ப சிடுசிடுப்பானவர். தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை கடுமையாகத் திட்டுவார். தாசில்தாரின் தந்தையும் உதவி கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மகன் மீதுள்ள பாசத்தில் சம்பாதித்த சொத்து, பணத்தைக் கொடுத்து விட்டு, அவர் போடும் சாப்பாட்டை சாப்பிட்டு வந்தார். மருமகள் மாமனாரை மதிக்கவே மாட்டாள்.

இந்த நிலையில், சில ஊழியர்கள் அவரைச் சந்தித்து, ""உங்கள் மகன் வார்த்தைகளால் எங்களைப் புண்படுத்துகிறார். அவரிடம் நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா?'' என்றனர்.

அன்று மாலை மகன் அலுவலகத்தில் இருந்து வந்ததும், ""ஏனடா! அடுத்தவங்க வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டுகிறாய்?'' எனக் கண்டித்தார்.
தாசில்தார் குதித்தார். ""எனக்கே புத்தி சொல்கிறாயா? நீயே என் வீட்டில் தண்டச்சோறு சாப்பிடுகிறாய். வெளியே போய்விடு. பிச்சை எடுத்து சாப்பிடு,'' என்று கத்திவிட்டு போய்விட்டார்.
 
பெரியவர் சற்றும் கலங்கவில்லை. மறுநாள் காலை தாசில்தார் ஆபீஸ் முன் உட்கார்ந்து விட்டார்.

""ஐயா! என் மகன் இந்த ஆபீசிலே தான் தாசில்தாரா வேலை செய்றான்! என்னை பிச்சை எடுத்து சாப்பிடச் சொல்லிட்டான். இரக்கமுள்ள ஐயாமாரே! தர்மப்பிரபு! பிச்சை போடுங்க சாமி,'' என கத்திக் கொண்டிருந்தார்.
 
அப்போது மகன் ஜீப்பில் அலுவலகத்துக்கு வர மானம் போய்விட்டது. அப்பாவை, உடனேயே ஜீப்பில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டார். தகவல் பத்திரிகைகளுக்குப் போய் உயரதிகாரிகளின் கண்டனத்துக்கும் ஆளானார்.
 
இரக்கமில்லாத பிள்ளைகளுக்கு, இப்படி புத்தியில் உறைக்கிற மாதிரி பாடம் கற்பித்தால் தான், இந்த கலியுகத்தில் பெரியவர்களுக்குரிய மரியாதை கொஞ்சமாவது காப்பாற்றப்படும். 

Cheers!

Saturday, June 9, 2012

Moral Stories in Tamil # 9 - Looks do not matter

சிவக்க வைத்த சிவப்பு மாப்பிள்ளை

வாழ்க்கையில் ஒருமுறை தவறு செய்தால் போதும்...அதன் விளைவு காலம் காலமாக நம்மை விரட்டி வரும். கடைசி வரை நிம்மதி இருக்காது.
தணிகாசலம்... நடுத்தர குடும்பத் தலைவர். இவரது மகள் சங்கரி. எப்போதும் அலங்காரம் செய்தபடி இருப்பாள். 

ஒரு நாளைக்கு பத்துதடவை தலை வாருவாள். அப்படியும் திருப்தியில்லாமல், 11வது தடவையாக, அம்மாவிடம் சென்று கூந்தலை பின்னச் சொல்வாள். தனக்கு அழகான கணவன் வர வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.

தணிகாசலம், தன் தங்கை மகன் குணசேகரனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். பையன் ஏதோ ஒரு உத்தியோகத்தில், குடும்பம் நடத்துமளவு சம்பளம் பெறுபவனாக இருந்தான். ஆள் கருப்பென்றாலும், மனம் வெள்ளை. சிறந்த பக்திமானும் கூட.

இந்த தகவல் சங்கரியின் காதுக்கு வந்ததோ என்னவோ... குய்யோ முறையோ என அழ ஆரம்பித்து விட்டாள்.

""போயும் போயும் என்னை ஒரு கருப்பனுக்கா கட்டி வைப்பீர்கள்! அவன் சாமியார் மாதிரி இருப்பான். சம்மதிக்கவே மாட்டேன். 

சிவப்பழகனைப் பிடித்து வாருங்கள்,'' என்று பிடிவாதம் செய்தாள்.
அப்பாவும் அம்மாவும் செய்வதறியாமல், மகளின் விருப்பத்திற்கு தலையாட்டினர்.

ஒருமுறை, அம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. விழாவுக்கு, பக்கத்து வீட்டுக்கு சுந்தரம் என்பவன் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்தான். பெயருக்கேற்ப ஆள் கொள்ளை அழகு. அவனை சங்கரி பார்த்தாள்.

"அவனைத் தனக்கு பேசி முடியுங்களேன்' என்று அம்மாவிடம் கெஞ்சினாள்.
பெற்றவர்களும் ஏற்பாடு செய்ய, சுந்தரம் வீட்டார் சந்தோஷமாக திருமணத்தை முடித்தனர். அதன்பிறகு தான் விவகாரம் ஆரம்பித்தது. சுந்தரம் வேலைக்குப் போகாமல், பெற்றவர்கள் சம்பாத்தியத்தில் காலம் ஓட்டிக் கொண்டிருந்தவன். அவர்கள் சில ஆண்டுகளில் மறைந்து விடவே, சங்கரியின் நகைகளை விற்று சாப்பிட்டான். வயிற்றுப்பாட்டுக்கே சிக்கல் வந்தது. வேண்டா வெறுப்பாக வேலைக்குப் போனான். குறைந்த கூலி கிடைத்தது. ஒருவர் அவன் வீட்டுக்கு வந்து, ""கொத்தனார் வேலை செய், தினமும் நூறு ரூபாய் கிடைக்கும்,'' என்றார். அந்த வேலை சுந்தரத்துக்கு தெரியும். பத்துநாள் செய்தால், இருபது நாள் லீவு போட்டு விடுவான். பிறகெப்படி...அவனை நம்பி வேலை கொடுப்பார்கள்!

சுந்தரத்தின் முகமே மாறிப்போனது. சிவப்பாக இருந்தவன் கவலையிலேயே கருத்து விட்டான். தன் மணாளனின் நிலையைப் பார்த்து சங்கரி அழுதாள். சிவப்பு மாப்பிள்ளை வேண்டும் என்றவளின் மனமும் சிவந்து போயிருந்தது.
""நான் எவ்வளவோ சொன்னேனே! புற அழகைப் பார்த்ததால் வந்த வினையைப் பார்த்தாயா! உன் வாழ்க்கை பெண்களுக்கு ஒரு பாடம். கருப்போ, சிவப்போ யார் உழைப்பாளியோ அவனுக்கு தான் ஒரு பெண் மாலையிட வேண்டும். அழகன், பணக்காரன் என்பது மட்டும் தகுதியல்ல. நீ செ#த தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறாய். உன் புருஷன் சரியில்லை என்றால், நீ நாலு வீட்டுக்கு போய் வேலை செய்து பிழைத்துக் கொள்,'' என்று விரட்டி விட்டார்.
 
ஒரு காலத்தில் அலங்காரவல்லியாக வலம் வந்த சங்கரி, இப்போது வீடுகளில் வேலைக்காரியாக இருக்கிறாள். அவளது உழைப்பில், இவளது கணவனும் சாப்பிடுகிறான்.

Cheers!

Friday, June 8, 2012

Moral Stories in Tamil # 8 - Obstacles

தடைகளைத் தகர்த்தால்...! 
 
பக்தி மிக்க அரசன் ஒருவன், தினமும் பூஜை செய்யாமல் சாப்பிட்டதில்லை.

ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற அவன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. வீரர்களும் அவனுடன் தங்கினர். மறுநாள், இறைவனை பூஜிக்கத் தயாரானான். ஒரு மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனை சிவலிங்கமாகக் கருதி, காட்டு மலர்களால் பூஜித்தான். பின் தியானத்தில் ஆழ்ந்தான்.
 

அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்தி வந்தான். அவசரத்தில் மன்னன் வணங்கிக் கொண்டிருந்த மணல்மேட்டின் மேல் கால்பட்டது. மன்னன் இருந்ததையே அவன் கவனிக்கவில்லை. அவனது எண்ணமெல்லாம், மானைப் பிடிப்பதிலேயே இருந்தது.
 

தன் முன்னால் ஏதோ சத்தம் கேட்டதே என்று கண்விழித்த அரசன், மணல்மேடு கலைந்து கிடந்தது கண்டு கோபமடைந்தான்.
 

""லிங்கத்தை மிதித்ததோடு, இங்கே ஒருவன் இருப்பதையே சட்டை செய்யாமல் போகிறானே! நான் மன்னன் என்பதாவது அவனுக்குத் தெரியுமா என்ன! ஆணவம் பிடித்த அவனைப் பிடியுங்கள்,'' என்று ஆணையிட்டான். வீரர்கள் பின்னால் ஓடினர்.
 

ஆனால், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். இதனால் மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது.
 

வீரர்களை கடிந்து கொண்டான். அவர்கள் தலையைத் தொங்கப்போட்டு கொண்டு நின்றனர். சிறிதுநேரம் கழிந்தது. வேடன், தான் துரத்திய மானை சுமந்து கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்தார்கள் வீரர்கள். அவனைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள்.
அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன்.
 

""வேந்தே! வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்!'' என்று அரசரைப் பணிந்தான். அவனை எரித்துவிடுபவர்போல் பார்த்தார் மன்னர்.
 

""இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனாகப் பாவித்து வணங்கிய மணல்மேட்டை மிதித்தாய். என்னை கவனிக்காதவன் போல் அவமானப் படுத்தி போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவுள்ளவன் போல் நடிக்கிறாயா?'' சீற்றமாக கேட்டார்.
 

""மன்னிக்க வேண்டும் மன்னா! வேட்டையின் போது என் கவனம் முழுவதும் மான் மேல்தான் இருந்தது. ஒருவன் ஒரு தொழிலைச் செய்யும் போது, அதன் மேல் முழுகவனம் வைத்தால் தானே வெற்றி பெறுவான். அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை,''.
 

வேடனின் பதில் நியாயமானதாக அரசனுக்குப் பட்டது.
 

அவனது மனதில் ஏதோ உறுத்தியது.
 

வேட்டையில் இருந்த வேடனின் கவனம் "இரை' மீது குவிந்திருந்திருக்கிறது. ஆனால், தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் "இறை' மீது குவிந்திருக்க வில்லையே.. அதனால் அல்லவா, வேடன் மணல் மேட்டைக் கடந்த போது அவனைக் கவனிக்க முடிந்தது. இந்த வேடனின் தொழில் பக்தியின் முன்னால், என் இறைபக்தி தோற்றுவிட்டதே!
 

தனக்கு அறிவுப்பாடம் புகட்டிய வேடனுக்கு, அரசன் வெகுமதியளித்து அனுப்பினான். பிறகு மவுனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.
 

தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால்? புதிய இடம், விலங்குகள் தாக்கிவிடுமோ என்ற பயம்...ஆகா! இடம் எதுவாக இருந்தாலும், இறைவன் நம்மைக் காப்பான் என்ற நம்பிக்கை தவிடு பொடியாகி விட்டதே! ஆம்... பக்தியில் சிரத்தை இல்லாததால் தான் இப்படி நிகழ்ந்தது என புரிந்தது அரசனுக்கு.
 

இந்த மன்னனைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் லட்சியப் பாதையில் இருந்து, சிறு இடைஞ்சல்களுக்கு அஞ்சி விலகி விடுகிறோம். நம் லட்சியத்துக்குத் தடையாக இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிந்து நீக்கிவிட்டால் போதும், வெற்றி உறுதி. 

Cheers!

Thursday, June 7, 2012

Moral Stories in Tamil # 7 - How to live your life

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா?

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். 

பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். 

எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். 

தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், 

வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. 

மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். 

நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.

Cheers!

Wednesday, June 6, 2012

Moral Stories in Tamil # 6 - Ego and Anger

 
கோபம் கொள்ளலாமா?

ஒரு பெற்றோருக்கு முருகன் என்ற மகன் இருந்தான். சிறு சிறு விஷயங்களுக்கு கூட பெற்றோரிடமும், நண்பர்களிடமும் கோபப்படுவான். இதனால், நண்பர்கள் அவனை விட்டு விலகி விட்டனர்.

தன்னை யாருமே அண்டாததால், அவனது கோபம் மேலும் அதிகமானது. சில வேளைகளில் அந்தக் கோபத்தை மூர்க்கத்தனமாக பெற்றோர் மீது காட்டினான். பாத்திரங்களை உடைத்தெறிவான். பெற்றோருக்கு மனக்கஷ்டத்துடன், பொருள் இழப்பால் பணக்கஷ்டமும் ஏற்பட்டது.
 
ஒருநாள், அவனது தந்தை கைலாசம் மகனை அழைத்தார்.
 
""முருகா! நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா! உன் கோபத்தால் எவ்வளவு பொருள் இழப்பு, அது மட்டுமா? உன்னை நாடி வருபவர்களும் குறைந்து விட்டார்கள். பள்ளிக்குச் சென்ற நீ, அங்கே பிள்ளைகளை அடித்ததால் நிர்வாகம் உன்னை நீக்கி விட்டது. படிப்பு பாழானது. ஆனாலும், திருந்த மறுக்கிறாய். உனக்கு கோபம் வருவதன் காரணம் தான் என்ன?'' என்றார்.
 
""எல்லாரும் என்னைக் கோபப்படுத்துகிறார்கள், என் விருப்பப்படி தான் எல்லாம் நடக்க வேண்டும். சூரியனும், சந்திரனும் என்னைக் கேட்டு தான் எழ வேண்டும், மறைய வேண்டும் என்ற கொள்கையுடைய வன் நான். என் சொல் எடுபடாததால், நான் கோபிக்கிறேன். நீங்களும், அம்மாவும் இனி நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். கோபப்படுவதை நிறுத்தி விடுகிறேன்,'' என்றான்.
 
அந்தக் கஷ்டத்திலும் கைலாசம் உலர்ந்த சிரிப்பொன்றை உதிர்த்தார்.
 
""உன் இஷ்டப்படியே ஆகட்டும். ஆனால், ஒரு நிபந்தனை . நீ கோபப்படும் சமயமெல்லாம், இந்தப் பெட்டியிலுள்ள ஆணியை எடுத்து அந்த மரத்தில் அடிக்க வேண்டும்,'' என்றார்.
 
முருகனுக்கு அவர் ஏன் அவ்வாறு செய்யச் சொல்கிறார் என்பது புரியவில்லை. இருந்தாலும், தலையாட்டி வைத்தான்.
 
அன்றுமுதல், அவன் கோபப்படும் சமயங்களில் ஆணிகளை எடுத்து அடித்தான். முதல்நாள் பத்து ஆணி அடிக்கப்பட்டது. மறுநாள், மரத்தின் அருகே சென்றான்.
 
""சே...இந்தளவுக்கா கோபப்பட்டிருக்கிறோம், கஷ்டமாக இருக்கிறதே!''என்று நினைத்தான். அதற்காக மறுநாள் கோபப்படாமல் இல்லை. ஆனால், எண்ணிக்கை ஏழாகக் குறைந்து விட்டது.  இப்படியே ஆறு, ஐந்து, மூன்று எனக் குறையவே, மறுநாள் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.
 
""அப்படியானால், என்னால் கோபிக்காமலும் இருக்க முடியும் என்பது இந்த ஆணிகளின் எண்ணிக்கையில் இருந்ததே நிரூபணம்  ஆகிறது,'' என எண்ணிய வேளையில், கைலாசம் அவனை அழைத்தார்.

""முருகா! இனி நீ ஆணி அடிக்க வேண்டாம். அடித்த ஆணிகளைப் பிடுங்கு,'' என்றார். அவனும் அர்த்தம் புரியாமல் அவற்றைப் பிடுங்கினான்.
 
ஆணியைப் பிடுங்கிய இடங்களில் துவாரமாயிருந்தது. சில இடங்களில் பால் கசிந்து, மரத்தை அசுத்தப்படுத்தியிருந்தது.
 
""பார்த்தாயா முருகா! நீ மரத்தில் அடித்த ஆணி எந்தளவுக்கு துளை ஏற்படுத்தி அசுத்தப்படுத்தி உள்ளதை! மரத்திலேயே இந்தளவுக்கு துவாரம் விழுந்தால், உன் சொல்லால் புண்பட்ட இதயங்கள் எத்தனை இருக்கும்! மரத்தில் பால் வழிந்தது போல், அவர்களும் கண்ணீர் வடித்திருப்பார்களே! அவர்களது தாமரை போன்ற முகம் கூம்பிப் போய் இருக்குமே! சிந்தித்துப் பார்,'' என்றார்.
முருகனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
 
அன்று முதல் அவனுக்கு ஆணியும், சுத்தியலும் தேவைப்படவில்லை.

Cheers!

Tuesday, June 5, 2012

Moral Stories in Tamil # 5 - Respect others

மனுஷனை மனுஷன் மதிக்கணும்

மனிதனுக்குள் எவ்வளவோ திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்போதெல்லாம், பணத்தை வைத்து தான் ஒருவரது மதிப்பு எடையிடப்படுகிறது. திறமைக்கு மரியாதை கொடுப்பவர்கள் ரொம்ப சிலர் தான்!

செல்வி என்ற பணக்கார பெண்ணின் வீட்டுக்கு இன்னொரு பணக்காரியான மல்லிகா விருந்தாளியாக வந்தாள். விருந்தினர் அறையில், செல்வி பல ஓவியங்களை மாட்டி வைத்திருந்தாள். அவற்றை வாங்கிய விதம், அவற்றுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்தது பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டாள்.
 
மல்லிகாவுக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை.
 
""ஏனடி! உனக்கு அறிவிருக்கா! யாராவது ஐயாயிரம், பத்தாயிரத்துக்கு ஓவியங்களை வாங்குவார்களா! இது எவ்வளவு காலமடி நிலைக்கும்! வெறும் வண்ணத்துக்கும், திரைச்சீலைக்குமா இவ்வளவு காசு கொடுப்பார்கள்! பைத்தியக்காரி! என்னைப் பார்! நீ இங்கு வாங்கி வைத்துள்ள ஓவியங்களுக்கு நிகரான தொகைக்கு வைர நெக்லஸ் வாங்கி, கழுத்தில் அணிந்திருக்கிறேன், எப்படி டாலடிக்கிறது பார்,'' என்றாள் கர்வம் பொங்க!
 
செல்வி அவளிடம்,""மல்லி! நீ கரிக்கட்டையாய் கிடந்து சற்று பளபளப்பைப் பெற்றுள்ள ஒரு பொருளுக்கு மதிப்பு கொடுக்கிறாய். நானோ, இவற்றை வரைந்த மனிதனின் திறமைக்கு மதிப்பளிக்கிறேன். பகட்டுக்கு செலவழிப்பதை விட, மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வர செலவழிப்பது தான் எனது கொள்கை. மனிதனின் திறமைக்கு மதிப்பளிக்கும் நாட்டிற்கு செல்வம் தானாகவே வந்து சேரும்,'' என்றாள்.
 
ஆம்...அவள் சொன்னது நிஜம் தானே!

Cheers!

Monday, June 4, 2012

Moral Stories in Tamil # 4 - Just be yourself

எப்போதும் போல் இருங்க!

ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களை அழைத்தார்.
 
""நம் நிறுவனத்தின் மேலாளர் பதவிக்காலம் இன்னும் ஆறுமாதத்தில் முடியப்போகிறது. அவருக்குப் பிறகு உங்களில் ஒருவரை மேலாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளேன். மாதம் 5 லட்சம் சம்பளம். உங்கள் நடவடிக்கைகளை இந்த ஆறுமாதமும் கூர்ந்து கவனிப்பேன். யார் தகுதியுடையவர் எனக் கருதுகிறேனோ, அவரே மேலாளர் ஆவார்,'' என்றார்.
 
ஐந்து லட்சம் சம்பளம், கார், பங்களா வசதியெல்லாம் கிடைத்தால் யார் விடுவார்...
 
ஊழியர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர். பலர் வேலைநேரம் முடிந்த பிறகும், ஏதாவது ஒரு வேலையை பரபரப்பாக செய்வது போல் நாடகமாடினர்.
 
ஆறுமாதம் கழிந்தது. அன்று தான் மேலாளர் பதவிக்குரிய நபர் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். எல்லார் மனதிலும் திக் திக்..ஒரே ஒருவரைத் தவிர. அவர் வழக்கம் போல், தன் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரருகே சென்ற தலைவர், ""நீங்கள் தான் இனி நிறுவனத்தின் மேலாளர்'' என்றார்.
எல்லாருக்கும் சப்பென்றாகி விட்டது.
 
""ஐயா! நாங்கள் எவ்வளவு கடுமையாகப் பாடுபட்டோம், அதிலும் இந்த ஆறுமாத காலத்தில் எவ்வளவு தூரம் போராடினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரோ, வழக்கமான பணியைத் தான் செய்தார். அவரைப் போய் தேர்ந்தெடுத்தீர்களே!'' என்றனர்.
 
""ஊழியர்களே! அவர் எட்டு மணி நேரத்துக்குள் 16 மணி நேர வேலையை முடிப்பவர். நீங்களோ 16 மணிநேரம் வேலை செய்தும், நான்கு மணி நேர வேலையைக் கூட நல்லபடியாக செய்யவில்லை என்பதை உங்கள் வேலைக்குறிப்பு எடுத்துச் சொல்கிறது. மேலும், பதவியைத் தேடி அவர் ஓடவில்லை.
 
ஆசைப்படவும் இல்லை. ஆசையில்லாத ஒருவரால் தான், கம்பெனியின் நிதிநிர்வாகத்தையும் மோசடி ஏதுமின்றி செய்ய முடியும்.
 
அவர் அவராகவே இருந்தார். எனவே, அவரைத் தேர்ந்தெடுத்தேன்,'' என்றார்.
குறிப்பிட்ட நேரத்தில், தரப்பட்ட பணியை ஒழுங்காகச் செய்தாலே போதும். பதவியும், பணமும் தேடி வரும்.

Cheers!

Sunday, June 3, 2012

Moral Stories in Tamil # 3 - Live with Dignity

மான் போல மானம் வேண்டும்!

உத்தரபிரதேசத்தில் கயா என்ற ÷க்ஷத்திரம் இருக்கிறது. இங்கே தர்ப்பணம் செய்வதற்காக செல்பவர்கள், தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்றை விட்டு வருவது வழக்கம்.

ஒரு தம்பதியர் அந்த ஊருக்குப் போனார்கள். தர்ப்பணம் செய்யும் போது, பண்டா (குருக்கள்) அவர்களிடம், ""நீங்க எதை விடப்போறீங்க?'' என்று கேட்டார்.

கணவனுக்கு எதையும் விட மனமில்லை, யோசித்துக் கொண்டே இருந்தார்.

""கத்தரிக்காயை விடறீங்களா?''

""எனக்கு அது ரொம்ப பிடிக்குமே,''.

""கேரட்டு...''

""அது கண்ணுக்கு நல்லதாச்சே! வைட்டமின் "ஏ' இருக்கு''.

""சரி...போகட்டும், தக்காளியை விட்டுடுங்க. அதை அதிகமா சாப்பிட்டா கால்

உளைச்சல் வரும்னு சொல்றாங்க,''.

""அது விலை குறைவாச்சே,''.

""அப்ப...உருளைக்கிழங்கு,''.

""பூரி மசால்னா எனக்கு உயிரு. உருளைக்கிழங்கு இல்லாம எப்படி மசால் செய்யுறது,''.

பண்டாவுக்கு சலிப்பு வந்துவிட்டது. ""சரி...நீங்களே ஒண்ணைச் சொல்லுங்க,''.
கணவன் ரொம்ப யோசித்தார்.

""ஐயா! காசு பணம் செலவழிக்காம, உடம்பைக் கெடுத்துக்காம ஒண்ணே ஒண்ணை விடுதேன்!''

""என்ன அது..'' பண்டா அவசரப்பட்டார்.

""மானம்,''.

பண்டா தலையில் அடித்துக் கொண்டே, ""அம்மா! நீங்க எதை உடுறீங்க!'' என மனைவியிடம் கேட்டார்.

""குருக்களே! இந்த புருஷனை விட்டுடுறேன்,''.

""ஏம்மா!''

மானத்தை விட்ட புருஷனோட எப்படி வாழுறது!''

திருவள்ளுவர் சொன்னார்.
""மான் கூட மயிர் நீக்கினால் உயிர் வாழ்வதில்லை,'' என்று.
அப்படியானால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்?
- வாரியாரின் சொற்பொழிவில் இருந்து...

Saturday, June 2, 2012

Moral Stories in Tamil # 2- Try to live with what you have

இருக்கிறது போதுமப்பா!

கடவுள் சந்நிதிக்குள் நுழைந்தாலே போதும், ""ஏம்ப்பா! பக்கத்து வீட்டு பரமசிவம் கோடி கோடியா வச்சிருக்கான். நான் அவ்வளவாடா உன்கிட்டே கேட்கிறேன். ஏதோ அஞ்சு லட்சம் பத்து லட்சம் கேக்கிறேன். தரமாட்டாங்கிறியே! அவன் காரிலே போறான், எனக்கு ஒரு பைக் தரக்கூடாதா! ஏ முருகா! கண்ணைத் தொறந்து பாருடா,'' என்று கதறுபவர்கள் பலர்!

ஒருத்தன் இப்படித்தான் கடவுளைப் பாடாய் படுத்தினான். ஒருநாள், கடவுளே அவன் முன்னால் வந்து விட்டார்.

""என்னப்பா வேணும்''னார்.

""வேறென்ன கேக்கப்போறேன்! ஒரு முப்பது லட்சம், தங்க நகை, வைர வைடுரியங்கள் வேணும்''னான்.

அவர் மூன்று தேங்காயைக் கொடுத்தார். ""என்ன சொல்லி உடைக்கிறாயோ, அது இதில் இருந்து வரும்,'' என்றார்.

அவன் "முப்பது லட்சம் வரட்டும்' என்று சொல்ல வாயெடுத்த வேளையில், அவன் மனைவி வந்து ""என்னங்க! டீ போடட்டுமா!'' என்றான்.

""ஆங்...முக்கியமான வேலையா இருக்கேன்லே! உன் தலையிலே இடிவிழ'' என்றான்.

திடீரென மேகக்கூட்டம்...இடி இடித்தது. அவன் மனைவி தலையில் விழுந்து விட்டது.

""ஐயோ இறைவா! விளையாட்டா சொன்னது வினையாப் போச்சே! அவளுக்கு உயிர் பெற்று எழட்டும்,'' என்று சொல்லியபடியே இன்னொரு தேங்காயை உடைத்தான். அவள் எழுந்தாள். ஆனால், இடி விழுந்ததில் முகம் விகாரமாகி விட்டது.

""இவளோடு எப்படி குடுத்தனம் நடத்துறது! பழைய முகம் திரும்பி வரட்டும்,'' என்றான். அவளுக்கு முந்தைய முகம் கிடைத்தது.

ஆக, முப்பது லட்சம் போச்சு! ஒருவருக்கு என்ன கிடைக்கிற வேண்டுமென இருக்கிறதோ, அதுதான் கிடைக்கும். 

கடவுள் கொடுத்திருக்கிற சவுகரியத்தோட வாழ கத்துக்கணும்....புரியுதா!

Cheers!

Friday, June 1, 2012

Moral Stories in Tamil # 1- True Love

I am back to Moral Stories this month of June, but this time around, it is in Tamil. Hope you will enjoy them.

மனம் ஒன்றி வாழ்வோம்! 
காளியம்மாள்...கருப்பு நிறம்...அழகு ரொம்பக்குறைவு. இருந்தாலும், சிவந்த நிறம், நல்ல அழகு, பங்களா, கார், நிலபுலன்கள் உள்ள மாப்பிள்ளை வேண்டும் என்று பெற்றவர்களிடம் கூறினாள்.

சில பெண்களுக்கு நல்ல நேரம்...அவள் எப்படிப்பட்ட குணமுள்ளவளாக இருந்தாலும், ஒரு பைத்தியக்காரன் சிக்குவான். அப்படித்தான் சிக்கினான் முருகவேல். காளியம்மாள் எதிர்பார்த்த அழகு, சொத்து வசதியுடன் குணவானாகவும் அமைந்தான். பக்திமானான அவன் காளியம்மாளை கண்ணுக்கும் மேலாகக் கவனித்தான். அவனது அன்பை "பயந்தாங்கொள்ளி தனம்' என நினைத்துக் கொண்ட காளியம்மாள், முருகவேலின் மனம் புண்படும்படி பேசுவாள்.
 
அவள் என்ன முடிவெடுத்தாலும் முருகவேல் தலையாட்டினான். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் அவர்கள் எதிரும் புதிருமாக இருந்தனர். முருகவேல், இறையடியார்களில் ஒருவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவிடச் சொல்வான். காளியம்மாளுக்கு இதில் விருப்பமில்லை. எப்படியாவது, அதற்கு முடிவு கட்ட எண்ணி விட்டாள்.
 
ஒருநாள், அடியவர் ஒருவரை முருகவேல் அழைத்து வந்தான். மனைவியை சமைக்கச் சொல்லிவிட்டு, பக்கத்து தெருவிற்கு தயிர் வாங்கப் போய்விட்டான்.
 
அப்போது, காளியம்மாள் அம்மிக்குழவி ஒன்றிற்கு மாலை போட்டு அடியவரின் கண்ணில் படும்படி வைத்தாள். அடியவர் அதுபற்றி விசாரிக்க, ""சாமி! என் கணவர் இந்தக்குழவியை மாலை போட்டு அலங்கரிப்பாரு. இங்கு வரும் அடியவர்கள் சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் தலையில் போட்டு கொன்று விடுவார். நீங்களாவது தப்பிச்சுடுங்க. அவர் வருவதற்குள் இங்கிருந்து போயிடுங்க!'' என்று ஒரு போடு போட்டாள்.

"இரக்க மனமுள்ளவளே! தகவல் சொன்னதற்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு, அடியவர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பறந்து விட்டார். தயிருடன் திரும்பிய முருகவேல், அடியவரைக் காணாமல் தவிக்கவே, ""இந்தா பாருங்க! நான் அம்மியிலே மசாலா அரைச்சுட்டு இருந்தேன். அந்தப் பெரியவர், இந்த அம்மிக்குழவி சிவலிங்கம் போல இருக்கிறதென்று பூஜை செய்யக் கேட்டார். யாராச்சும் குழவியைக் கொடுப்பாங்களா! இதைத் தரமுடியாது. இது என் மாமியார் எனக்கு ஆசை ஆசையாய் கொடுத்தாங்கன்னு சொன்னேன். அவர் கோவிச்சுகிட்டு போயிட்டாரு. இப்ப தான் கிளம்பினாரு. நீங்க வேணா அவரை தேடி கூட்டிகிட்டு வாங்க,'' என்றாள்.
 

முருகவேல் அம்மிக்குழவியை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு ஓடினான். தன் பின்னால் முருகவேல் அம்மிக்கல்லுடன் ஓடிவருவதைப் பார்த்த அடியவர், "ஆஹா...இவன் நம்மைக் கொல்லாமல் விடமாட்டான் போலிருக்கிறதே!' என எண்ணி ஓட்டம் பிடித்தார். ஆனாலும், முதுமையால் தள்ளாடி ஓரிடத்தில் விழுந்து விட்டார்.
 
தன்னை நெருங்கிய முருகவேலிடம்,""நான் உனக்கு என்னப்பா துன்பம் செய்தேன். என்னை ஏன் கொல்ல வருகிறாய்?'' என்று கேட்ட அடியவரிடம்,""சாமி! நீங்கள் இந்தக் குழவியை லிங்கமாக வழிபட கேட்டீர்களாமே! என் வீட்டு குழவி லிங்கமாக மாறும் பாக்கியம் பெற்றதென்றால் அதில் எனக்கும் பெருமை தானே! ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்றதும், ""அப்படி நான் ஏதும் கேட்கவில்லையே,' 'என்ற அடியவர், காளியம்மாள் சொன்னதைத் தெரிவித்தார்.
 
உண்மை வெளிப்படவே, காளியம்மாளின் குரூர குணம் சற்றும் மாறாதது பற்றியும், இத்தனை நாள் அவள் மீது அன்பு செலுத்தியும், தன் சிறிய ஆசைகளைக் கூட அவள் நிறைவேற விடமால் தடுப்பது குறித்தும் முருகவேல் வருத்தப்பட்டான். தன் மனைவியின் செயலுக்காக மன்னிப்பு கோரியவன்,""சுவாமி! இனியும் அந்தப் பெண்ணுடன் வாழ முடியாது. நானும் உங்களுடன் யாத்திரையாக வருகிறேன். இனி நீங்களே என் குரு,'' என்றான்.

அவர்கள் காசி நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கணவனைப் பிரிந்த காளியம்மாள் தனிமையில் தவித்து வருகிறாள். நல்ல கணவர் கிடைத்தும், மனம் ஒருமித்து வாழ மறுக்கும் பெண்களின் கதி காளியம்மாளைப் போல்தான் ஆகும். 

Cheers!