Monday, June 11, 2012

Moral Stories in Tamil # 11 - Marriage

அனுசரித்து வாழுங்க! 
 
சாம்பு! நம்ம வாசுதேவன் வீட்டிலே ஒரே ரகளை. புருஷன், பெண்டாட்டிக்குள் பெரிய போர்க்களம்,'' என்ற நண்பர் விஸ்வநாதனிடம், ""ஏன்! என்ன பிரச்னை அவர்களுக்குள்?'' என்றார் சாம்பு.

""பணப்பிரச்னை தான். இருவருமே சம்பாதிக்கிறார்கள், பணத்தை யார் செலவிடுவது? எப்படி செலவிடுவது என்பதில் தான் புகைச்சல். உன்னை அங்கே அழைத்து வரச்சொன்னான். நீ போய் அவர்களைச் சமாதானம் செய்து வை,'' என்றார் விஸ்வநாதன்.

வாசுதேவனுக்கும், அவர் மனைவி கலாவுக்கும் மிகவும் பரிச்சயமானவர் என்ற முறையில் சாம்புவும் அவர்கள் வீட்டுக்குச் சென்றார். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் இருவரும் இணைந்து அவரை வரவேற்றனர்.

""சாம்பண்ணா! ஏதாச்சும் சாப்பிடுங்களேன்,'' என்று வற்புறுத்தினாள் கலா.
 
""ஏம்மா தங்கச்சி! உன் வீட்டில் சாப்பிடுறது இருக்கட்டும், இரண்டு பேரும் ஏதோ பண விஷயமா சண்டை போட்டீங் களாமே! விச்சு வந்து சொன்னான். உங்களுக்குள் என்ன பிரச்னை?'' என்று கேட்டாரோ இல்லையோ, இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் புகார் சொன்னார்கள். அவர்களை அமைதிப்படுத்திய சாம்பு, ""கொஞ்சம் உட்காருங்க. ஒரு கதை சொல்றேன். அதைக் கேட்டுட்டு முடிவுக்கு வாங்க,'' என்றார் சாம்பு. இருவரும் பொறுமையாக அமர்ந்தனர்.
 
""ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். கொஞ்சம் அறிவு போதாது. சம்பாதித்ததை கோட்டை விடுவதில் அவனுக்கு நிகர் அவன் தான். ஒருநாள் அவன் ஒரு காளையுடன் சந்தைக்கு போனான். அதை ஒருவரிடம் விலை பேசிக்கொண்டிருந்த போது, ஒரு ஆடு வியாபாரி வந்தான்.

""அடேய்! மாட்டை என்னிடம் கொடுத்து விடு. பதிலாக, இந்த ஆட்டை வைத்துக்கொள். வளர்ப்பது ரொம்ப சுலபம், வருஷத்துக்கு இரண்டு குட்டி போடும். போதாக்குறைக்கு பால் வேறு தரும். இதை வைத்து நிறைய சம்பாதிக்கலாம்,'' என்றான். அவன் ஆட்டைவாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கோழி வியாபாரியை பார்த்தான்.

அவன் சில கோழிகளை அவனிடம் கொடுத்து, ""கோழி வளர்ப்பது ஆடு வளர்ப்பை விட சுலபம், தினமும் முட்டை, கடைசியில் இறைச்சிக்கும் விற்று விடலாம். வருஷத்துக்கு இருபது, இருபத்தைந்து குஞ்சு பொரிக்கும். அதை வளர்த்தால் முட்டையும் கூடும், குஞ்சும் கூடும்,'' என்று ஆசை காட்ட, அவனிடம் ஆட்டைக் கொடுத்து விட்டு கோழியுடன் சென்றான்.
ஓரிடத்தில் ஒருவன் அவனை மடக்கி, பத்து முட்டையைக் கொடுத்து, ""கோழியை வளர்ப்பது பெரிய தொந்தரவு. அங்கங்கே பறக்கும். யார் வீட்டு வைக்கோல் போரிலாவது முட்டை போடும். திருடர்கள் பிடித்துச் சென்று சமைத்து விடுவார்கள். இந்த முட்டை அப்படியல்ல, அப்படியே சமைத்து சாப்பிடலாம்,'' என்றான். அந்த முட்டாளும் வாங்கிக் கொண்டான். வீடு வந்து சேர்ந்தான். அவனை அவனது மனைவி பாராட்டினாள்,'' என்றவரை இடைமறித்தான் வாசுதேவன்.

""அவன் கொடுத்து வைத்தவன். தப்பே செஞ்சாலும் பெண்டாட்டி பாராட்டுறாளே,'' என்று குத்தலாகப் பேசியவன் லேசாக கலா பக்கம் திரும்ப அவள் முறைத்தாள். இதைக் கவனித்த சாம்பு கண்டுகொள்ளாமல் கதையைத் தொடர்ந்தார். அவனை பார்க்க வந்து காத்திருந்த ஒரு நண்பன், ""மாட்டோடு போனவன் முட்டையோடு வந்தும் உன் மனைவி பாராட்டினாளே! ஆச்சரியமா இருக்கே,'' என்றான்.

அதற்கு அவன்,""என் மனைவி மற்றவர்கள் முன்னால் என்னைத் திட்டமாட்டாள். தனித்தே அறிவுரை சொல்வாள். இதனால் எங்களுக்குள் பிரச்னையே வந்ததில்லை,'' என்று முடித்த மாமா, ""கலா! நீயும், வாசுவும் விஸ்வநாதன் முன்னால் சண்டை போட்டதால் தான் உன் குடும்ப விஷயம் அவனுக்குத் தெரிந்தது. நானும் கதை சொல்ல வேண்டி வந்துவிட்டது,'' என்றார்.
 
கலாவும், வாசுவும் தலை குனிந்தனர்.
 
""அண்ணா! வேடிக்கையான கதையாக இருந்தாலும் இரண்டு பேருக்கும் நல்லபுத்தி வர்ற மாதிரி சொன்னீங்க! இனி நாங்க அனுசரித்து செல்வோம்,'' என்ற கலாவுக்கு வாழ்த்துச் சொன்னார் சாம்பு.

Cheers!

1 comment:

  1. நூற்றுக்கு நூறு சரியாக சொன்னீர்கள்! தினசரி நிகழ்வுகளில் வீடாகட்டும் அல்லது அலுவலகமாகட்டும் இந்த குறிப்பை பின்பற்றினால் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். உறவுகள் மேன்பட நல்ல புத்தி கூறும் யாரையும் தூக்கி வைத்து கொண்டாடலாம்! There is a proverb, if you are appreciating some one - do it in public, if you want criticize someone make it private within four walls. Even if its criticism it supposed to be a constructive one!

    ReplyDelete

I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.