Thursday, June 7, 2012

Moral Stories in Tamil # 7 - How to live your life

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா?

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். 

பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். 

எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். 

தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், 

வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. 

மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். 

நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.

Cheers!

No comments:

Post a Comment

I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.