Saturday, June 16, 2012

Moral Stories in Tamil # 16 - Cannot cheat all the time

நமக்கு மேலே ஒருவன் 
 
யார் ஒருவன் தன்னை பலசாலி என்றும், புத்திசாலி என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக ஒரு அடி இருக்கிறது. ஏனென்றால், மனிதரில் பாயும் புலிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பாய்கின்ற தூரத்தில் தான் வித்தியாசம்...

ஒரு ஊரில் மகாபுத்திசாலியான திருடன். திருட்டில் எத்தனை "டெக்னிக்' உண்டோ, அத்தனையையும் பயன்படுத்தி, எவ்வளவு கவனமாக இருக்கும் ஆசாமியிடமும் திருடி விடுவான். போலீசிடம் சிக்காமலே காலத்தை கழித்துக் கொண்டிருந்தான்.
 
ஒருநாள், ஒரு சிறுவன் ஒரு கிணற்றுப்பக்கமாக நின்று அழுது கொண்டிருந்தான்.
 
அந்தப்பக்கமாக, திருடன் அன்று கொள்ளையடித்த பொருள் அடங்கிய மூடையுடன் வந்து கொண்டிருந்தான்.

அழுகிற பையனிடம், ""ஏண்டா அழறே! என்னாச்சு,'' என்றான்.
 
""அண்ணே! எங்கம்மா எங்கிட்ட ஒரு வெள்ளிச்செம்பைக் கொடுத்து பால் வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நான் இந்த கிணற்று சுவர் மேலே செம்பை வச்சுட்டு, இந்த மரத்திலே இருக்கிற மாங்காயைப் பறிக்க கல் வீசிட்டு இருந்தேன். திடீர்னு காத்தடிச்சு செம்பு கிணத்துக்குள்ளே விழுந்து மூழ்கிட்டுது. செம்பு இல்லாம போனா, எங்க அம்மா தோலை உரிச்சுடுவா,'' என்றான்.
 
திருடனுக்கு புத்தி எப்படி போகும்? ஆஹா...வெள்ளிச் செம்பாயிற்றே! அரைகிலோ வெயிட்டாவது இருக்குமே! கிராம் 70 ரூபாய்க்கு விற்குதே! அதை எப்படியும் அசத்தி விடுவதென முடிவுசெய்து, ""சரிப்பா! அழாதே, நான் கிணற்றுக்குள் போய் எடுத்துட்டு வந்துடறேன்,'' என தான் கொண்டு வந்த மூடையை கிணற்றுச் சுவரில் வைத்து விட்டு குதித்தான்.
 
உள்ளே எதுவும் சிக்கவில்லை. மேலே வந்தான். பையனையும் காணலே, தங்கநகைகள் கொண்ட மூடையையும் காணலே! புத்திசாலியான தன்னை ஏமாத்திப்புட்டானே ஒரு பொடிப்பயல்,'' என நொந்தபடியே சென்றான்.
நாம் மட்டுமே புத்திசாலி என நினைத்துக் கொண்டு, பிறரை ஏமாற்றினால், நம்மை ஏமாற்ற இன்னொரு மகாபுத்திசாலி வருவான். புரிகிறதா! 

Cheers!

No comments:

Post a Comment

I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.