Wednesday, June 13, 2012

Moral Stories in Tamil # 13 - Handle Life's challenges boldly

பிரச்னைகளை எதிர்த்து நில்


முருகனுக்கு பெரும் பணம் இருந்தது. அவனுடைய அப்பா சொத்து, சுகத்தையெல்லாம் விட்டு தான் சென்றிருந்தார். பணத்துக்கு குறைவே இல்லை. ஆனால், என்ன செய்வது? வாய்த்தவள் சரியில்லை. இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களும் அம்மாவுடன் சேர்ந்து, அப்பாவின் சொல்லுக்கு மாறாக ஏறுக்கு மாறாக பேசி வந்தார்கள். இதனால், முருகனுக்கு நிம்மதி போய்விட்டது.

ஒருநாள், அவனைப் பார்க்க அவனது தந்தையின் நண்பர் வந்தார். முருகன் தனது நிலையை அவரிடம் சொல்லி அழுதான். ""எனக்கு நிம்மதியே இல்லை,'' என்று புலம்பினான். அவனது நிலை பரிதாபகரமாக தோன்றினாலும், அவனது நலன் கருதி ஒரு பாடத்தையும் கற்பிக்க நினைத்தார் பெரியவர்.
 

""முருகா! இதற்காக நீ கவலைப்படாதே. உனக்கு நிம்மதி வேண்டும்! அவ்வளவுதானே! அப்படிப்பட்ட ஓர் இடத்தைக் காட்டுகிறேன். அங்கு வந்தால், உனக்கு எந்தத்துன்பமும் இல்லை,'' என்றார்.
 

முருகனுக்கு ஏக மகிழ்ச்சி! உடனடியாக அவருடன் கிளம்பிவிட்டான்.
 

அவர் அவனை நேராக இடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒன்றும் புரியாமல் விழித்த முருகன், ""இங்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்?'' என்றான்.
 

""நீ தானே நிம்மதியை விரும்பினாய். உலகத்தில் மனிதனாய் பிறப்பவன் நிம்மதியாய் உறங்குவது இங்குள்ள கல்லறைகளுக்குள் தான். அவன் உலகில் வாழும்வரை பிரச்னைகள் தொடரத்தான் செய்யும். அதைக் கண்டு பயந்தால், மேலும் மேலும் நிம்மதி குலையும். அவற்றை எதிர்த்து நிற்பவனை நிம்மதி தேடி வரும். அந்த சிவனைப் பார்த்தாயா! நிம்மதியான இடம் இதுதான் என்று, மயானத்திலேயே குடியிருக்கிறான். இப்போது சொல்! நீ பிரச்னைகளை சமாளித்து நிம்மதியைத் தேடப் போகிறாயா...இல்லை, இங்கே தோண்டப்பட்டுள்ள குழிகளுக்குள் புதைந்து கொள்ளப் போகிறாயா?'' என்றார்.
முருகனுக்கு புத்தி வந்தது.
 

""உண்மை தான்! நான் எனக்கு மட்டுமே பிரச்னைகள் இருக்கிறது என நினைத்தேன். உலகில் ஒவ்வொருவரும் பிரச்னையுடன் தான் இருக்கிறார்கள். பிரச்னைகளைக் கண்டு ஓடக்கூடாது. நம் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் புத்தி சொல்வோம், கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் பட்டு திருந்தட்டும்,'' என விட்டுவிட்டான். இப்போது, அவன் நிம்மதியாக இருக்கிறான். 

Cheers!

No comments:

Post a Comment

I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.