Monday, April 30, 2012

Ancient Stories # 30 - Dirty Cloth

அழுக்குத்துணியிலும் ஆண்டவன்

தயாசிந்து என்ற ஜகந்நாத பக்தர் பூரி நகரில் வசித்தார். 24 மணி நேரமும் அவருக்கு ஜகந்நாதரைப் பற்றிய சிந்தனை தான்!

ஜகந்நாதப் பெருமாளின் புகழ்பரப்பும் பாடல்களைப் பாடியபடியே ஆடுவார். அவரது இசையும்,தாளமும் பக்தர்களையும் நடனமாட வைக்கும். ஏழையாயினும், அவர் மீது பக்தர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். யார் என்ன கொடுத்தாலும் வாங்கமாட்டார்.

அவரது அன்றாட உணவு ஒரு டம்ளர் பால் மட்டுமே! அதையும் யாரும் தானாகக் கொடுத்து பருகமாட்டார். வீடு வீடாகப் போய், ""தாயே! ஒரு டம்ளர் பால் கொடுங்கள்,'' என பிச்சை கேட்பார். கொடுத்தால் குடிப்பார். இல்லாவிட்டால் பட்டினி.

ஒருமுறை, ஒரு வீட்டுவாசலில் நின்று பால் தரும்படி கூவினார். அந்த வீட்டுப்பெண் காலையிலேயே சமையல் முடித்து, கணவரைப் பணிக்கு அனுப்பி விட்டாள். பிள்ளைகளைக் குருகுலத்துக்கு அனுப்ப வேண்டி, அடுத்த சமையல் ஆரம்பமாகியிருந்தது. இதற்கிடையே, ஒரு குழந்தை பண்டம் கேட்டு அவளைப் பாடாய் படுத்தியது. இன்னொன்று, ""அம்மா! பசிக்குது! பாலாவது தாயேன்,'' என்று தொந்தரவு செய்தது.

இந்த நேரத்தில், ஒரு குழந்தை ஏதோ பொருளை வீச, அது அவள் தலையில் பட்டு "விண்' என வலித்தது. அந்தக் குழந்தையை நையப் புடைத்துக் கொண்டிருந்த வேளையில் தான், தயாசிந்து பிச்சை கேட்டு நின்றார்.

"போய்யா! போ! உங்களுக்கெல்லாம் வேறு இல்லையா! உழைத்துப் பிழைக்க வேண்டியது தானே! சோம்பேறி! இங்கே மனுஷி பாடாத பாடு படுகிறாள். இதில், நீர் வேறு பிராணனை வாங்குகிறீர்! ஓடிப்போ!'' என்றவள், கையில் இருந்த வீடு துடைக்கும் அழுக்குத் துணியை வீசினாள்.

அது தயாசிந்துவின் முகத்தில் வந்து விழுந்தது.

தயாசிந்து சந்தோஷப்பட்டார். ""இன்று பரந்தாமன் பாலுக்குப் பதிலாக அழுக்குத்துணியைத் தந்திருக்கிறான். இதுவும் கூட நல்லதுக்கு தான்,'' என்று எண்ணியவர், நேராக ஆற்றுக்குச் சென்றார். துவைத்துக் காய வைத்தார்.

அதை திரிதிரியாக கிழித்தார். அங்கே நெய் சர்வசாதாரணமாக கிடைக்கும். நெய்யுடனும், திரியுடனும் ஜகந்நாதர் கோயிலுக்குப் போனார். ஜகந்நாதருக்கு தீபம் ஏற்றினார். இவர் இங்கே தீபம் ஏற்றினாரோ இல்லையோ...அந்தப் பெண்ணின் கண்களில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தது.

"ஆ...இது ஜகந்நாதரின் சிற்பமல்லவா! ஜகந்நாதா! நீயா என் இல்லம் தேடி வந்தாய்! நான் கோபக்காரியாயிற்றே! கோபமுள்ள இடத்திற்கு தெய்வம் வராதே. ஆனாலும், எப்படி வந்தாய்?'' அவள் சந்தேகத்துடன் கோயிலை நோக்கி ஓடினாள்.

தான் தூக்கி எறிந்த துணியைத் துவைத்து திரியாக்கி, நெய் தீபம் ஏற்றிய விபரத்தை அறிந்தாள். பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டாள். தயாசிந்துவின் கால்களில் விழுந்து, ""மகானே! தங்கள் பெருமை அறியாமல் தங்களை அவமானப்படுத்தி விட்டேன், மன்னியுங்கள்,'' என்றாள். சுற்றியிருந்தவர்கள் இதுகேட்டு உருகி நின்றனர்.

அவர் சிரித்தார்.

"அம்மா! இத்தனை நாள் பக்தி செலுத்திய என் கண்களுக்கு கூட அந்த பரந்தாமன் காட்சியளிக்கவில்லை. ஆனால், உன் கரித்துணிக்கு மயங்கி அந்த கருங்கண்ணன், உனக்கு காட்சியளித்தானே! உன் மூலம் என் புகழ் பரவ அவன் வழி வகுத்தான்,'' என்று நா ததும்பச் சொன்னார்.

அன்று முதல், தயாசிந்துவின் சிஷ்யை ஆனாள் அந்தப் பெண்.

Cheers!


Sunday, April 29, 2012

Ancient Stories # 29 - God forgives mistakes done unknowingly

கவுதம முனிவரின் மனைவி அகலிகை. பேரழகியான இவள் மீது இந்திரன் ஆசைப்பட்டான். கவுதமர் அதிகாலையில் சேவல் கூவியதும், நீராட ஆற்றுக்குச் செல்வது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், சேவலாய் வடிவெடுத்து, ஒருநாள் நடுநிசியிலேயே கூவ, கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். இந்திரன், தன் வடிவை கவுதமர் போல மாற்றிக் கொண்டு, குடிலுக்குள் வந்து, ""இன்னும் விடியவில்லை, சேவல் தவறாகக் கூவியிருக்கும் போல' என்று சொல்லி, அகலிகையுடன் தனித்திருந்தான். அவள் கற்பிழந்தாள்.

திரும்பி வந்த கவுதமர் நடந்ததை அறிந்து, அவளைக் கடிந்து கொண்டார். கல்லாகப் போகும்படியும், ராமனின் கால்பட்டால் தான் விமோசனம் என்றும் சொல்லி விட்டார். ராமனும் வந்தார். கால் பட்டது. அகலிகை எழுந்தாள்.

கற்பிழந்த ஒருத்தியை ஏற்றுக்கொள்ள கவுதமருக்கு தயக்கம். ""உருவம் ஒன்றாக இருந்தாலும் கணவனுக்கும், இன்னொருவனுக்கும் ஸ்பரிச பேதம் தெரியாத இவளை நான் எப்படி ஏற்பது?'' என்றார்.

உடனே ராமன்,""கவுதமரே! முக்காலமும் உணர்ந்த ஞானியான நீரே, கூவியது உண்மைச் சேவலா, பொய்ச்சேவலா எனத்தெரியாமல் சந்தியாவந்தனத்துக்கு கிளம்பிச் சென்றீரே! அப்பாவியான, இவள் உமக்கும், அவனுக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி அறிவாள்?'' என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

முனிவரால் பதில் சொல்ல முடியவில்லை. அகலிகையை ஏற்றுக் கொண்டார். தெரியாமல் செய்த தவறுக்கு இறைவனின் சந்நிதானத்தில் மன்னிப்பு உண்டு.

Cheers!

Saturday, April 28, 2012

Ancient Stories # 28 - Throw away the Worry

வேதம், புராணம், மகாபாரதம் இப்படி எத்தனையோ எழுதியும் வியாசரின் கவலை தீராமல், சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்திருந்தார். நாரதர் அங்கு வந்தார்.

"வியாசரே! நீண்ட நாளாக ஒரு சந்தேகம். சிதை, சிந்தை இரண்டையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்,'' என்றார்.

"சிதை என்பது உயிரற்ற உடலுக்குரிய படுக்கை. சிந்தை என்பது மனதில் ஏற்படும் வருத்தம்,'' என்றார் வியாசர்.

நாரதர் அவரிடம்,""சிந்தையை விட சிதை மேலானது. சிதையில் உயிரில்லாத பிணம் மட்டுமே எரியும். ஆனால், கவலையால் உயிருள்ள நம் சரீரமே எரிந்து விடும். அதனால், கவலையை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்,'' என்றார். இந்த அருமையான விளக்கம் வியாசருக்கு மனதில் தெளிவு ஏற்பட்டது.

"வியாசரே! உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டுமானால், என்றுமே மகிழ்ச்சியாக இருந்த கிருஷ்ணரின் பெருமையைக் கூறும் பாகவதத்தை எழுதுங்கள். கவலை தீரும்,'' என்று வழிகாட்டினார். 

வியாசரும் அதன்பின் அமிர்தம் போன்ற பாகவத்தை எழுதினார். மகிழ்ச்சியில் திளைத்தார். அவதாரங்களிலேயே கிருஷ்ணாவதாரம் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Cheers!

Friday, April 27, 2012

Ancient Stories # 27 - Be Detached

வேண்டாமப்பா இந்தப் பிறவி

சித்திரகேது என்ற ராஜாவுக்கு குழந்தை இல்லை. அவரும் பல ராணிகளைக் கல்யாணம் செய்து பார்த்தார். அந்த பாக்கியத்திற்கு வழியே இல்லை. ஒருமுறை ஆங்கிரஸ் முனிவர், ராஜாவின் அவைக்கு வந்தார்.

அவரிடம் தனது குறையைச் சொன்னார் ராஜா. இந்த முனிவர் யார் தெரியுமா? நவக்கிரக மண்டலத்தில் குரு எனப்படும் பிரகஸ்பதி இருக்கிறாரே! அவரது தந்தை. குழந்தை பாக்கியத்தை தரும் சக்தி குருவுக்கே இருக்கும்போது, அவரது தந்தைக்கு இராதா என்ன! ""சித்திரகேதுவுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கும்,'' என அருள்பாலித்தார்.

அவரது அருள்வாக்குப்படி, மூத்தராணி கர்ப்பவதியானாள். அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதைப் பார்த்து மற்ற ராணிகளுக்கு பொறாமை ஏற்பட்டது. இந்த மகாராஜா, இனி மூத்த ராணியையும், மகனையும் தான் கவனிப்பார். நம்மைப் புறந்தள்ளி விடுவார் என்று எண்ணினர். இதன் விளைவாக குழந்தையைக் கொன்றுவிட்டனர். ராஜாவும், ராணியும் கிடைத்த குழந்தையும் இல்லாமல் போயிற்றே என வருந்தினர். 

அப்போது, அரண்மனைக்கு வந்த ஆங்கிரஸ் முனிவரிடம், தங்கள் நிலை பற்றி அழுதனர்.

"இறப்பு சகஜம்'' என்று அவர் எடுத்துச்சொல்லியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. அப்போது அங்கு வந்த நாரதர், குழந்தையை விட்டுப் பிரிந்த ஜீவாத்மாவை வரவழைத்தார். ஆங்கிரஸர் அதனிடம், ""நீ மீண்டும் குழந்தையைச் சேர். ராஜாவும் அவர் மனைவியும் பிள்ளைப் பாசத்தால் வருந்துகின்றனர்,'' என்றார்.

அதற்கு ஜீவாத்மா, ""நான் இப்பிறப்பில் இவர்களுக்கு பிள்ளை, முற்பிறப்பு ஒன்றிலோ இவர்களுக்கு தந்தையாக இருந்தேன். இந்த உறவுகள் எல்லாம் ஜீவன் உடலில் இருக்கும் வரை மட்டுமே! பிறவிச்சக்கரத்தில் இருந்து விடுபடவே நான் விரும்புகிறேன். எனவே, இந்த உடலைச் சேர நான் விரும்பவில்லை'' என்றது.

அப்போது தான் ராஜா, வாழ்வின் உண்மைநிலையைப் புரிந்து கொண்டார். அதன்பின் அவர் பாசத்திற்கு இடம் கொடாமல், தாமரை இலை தண்ணீர் போல் வாழ்ந்தார். 

Cheers!

Thursday, April 26, 2012

Ancient Stories # 26 - Learn with commitment

தமிழில் மகாபாரத்தை எழுதிய நல்லாப்பிள்ளை, 20 வயது வரை அடிப்படை கல்வியறிவு கூட பெறவில்லை. இவரது மனைவி கூட இவரது கல்வியின்மை பற்றி கேலி செய்திருக்கிறாள். 

இதனால், படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் தங்கி கற்றார். ஓயாமல் ஒழியாமல் இரவு பகலாகப் படித்தார். அரிச்சுவடியில் இருந்து தொல்காப்பியம் வரை பாடங்களை நடத்தப்பட்டன. பாடம் கேட்பதில் இருந்த ஆர்வத்தால், அன்றாட உணவைக் கூட நல்லாப்பிள்ளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 4 ஆண்டுகள் கழிந்தன. ஆசிரியர் விரும்பும் சிறந்த மாணவராக நடந்து, நல்ல புலமை பெற்றார்.
 
ஒருநாள் மதியம் நல்லாப்பிள்ளை சாப்பிட அமர்ந்தார். தயிர்சாதத்திற்கு துவையல் எடுத்துக் கொண்டவர், ""துவையல் கசக்கிறதே!'' என்று தன்னையும் மறந்து கத்திவிட்டார். ஆசிரியரும் மகிழ்ச்சியில் நல்லாப்பிள்ளையை அணைத்துக் கொண்டார்.
 
"தம்பி! நீ வீட்டுக்குப் புறப்படும் நேரம் வந்து விட்டது. இதுவரை பாடத்தில் கவனத்தைச் செலுத்தினாய். அதனால், நாள்தோறும் சாப்பிடும் வேப்பிலைத் துவையலின் கசப்பு கூட உனக்குத் தெரியவில்லை. பாடங்களை முழுமையாகக் கற்றுக் கொண்டுவிட்டாய். இப்போது தான், புறவுலக சிந்தனை உனக்கு வந்திருக்கிறது. அதனால், துவையலை சாப்பிடமுடியாமல் கசப்பு தெரிகிறது,'' என்றார்.
 
நல்லாப்பிள்ளைக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பாடத்தில் இருந்த கவனத்தில், அதுவரை தான் சாப்பிட்டது வேப்பிலை துவையல் என்பது கூட தெரியாமல் இருந்ததைப் புரிந்து கொண்டார். 

எதையும் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதே மாணவர்களுக்கு இக்கதை உணர்த்தும் கருத்து.

Cheers!

Wednesday, April 25, 2012

Ancient Stories # 25 - When the Mother disciplines the child

அம்மாவின் போதனை

ரிதத்துவஜர் என்ற அரசரின் மனைவி மதாலஸா. இவள் பக்திப்பூர்வமானவள். "மனிதனே தன் செய்கைகளால் தெய்வமாகலாம்' என நினைப்பவள்.
 
மதாலஸா கணவரிடம், ""அன்பரே! நம் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைக்க வேண்டும். யாரும் அதில் தலையிடக்கூடாது,'' என்றாள்.
 
காரணம் தெரியாத அரசரும் சரியென வாக்கு கொடுத்து விட்டார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்ததும் அரசர் விக்ராந்தன் (ஊர் ஊராக சுற்றுபவன்) என்று பெயரிட்டார். இதைக் கேட்டு அரசி சிரித்தாள். அதற்கான காரணம் அரசருக்குப் புரியவில்லை. ஆனால், கேட்கும் தைரியம் இல்லை. அந்தக் குழந்தையை அரசி "நிராஞ்ஜன்' என்று அழைத்தாள். இதற்கு "பற்றில்லாதவன்' என்று பொருள்.
 
பாலூட்டும் பருவத்திலேயே வாழ்க்கை என்றால் இன்னதென்று, குழந்தைக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
 
"இந்த வாழ்வு பொய்யானது. பிரம்மம் (தெய்வம்) ஒன்றே மெய்யானது,'' என்று சொல்லிக்கொண்டே பால் கொடுப்பாள். குழந்தை பெரியவனான பின் தவமிருக்க போய்விட்டான். இதையடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளும் இதே போல் தவமிருக்க சென்று விட்டனர்.
 
அரசருக்கு கவலை வந்து விட்டது. "ராணி இப்படியே செய்தால், தனக்குப் பிறகு நாடாள யார் இருக்கிறார்கள்? இந்த தேசம் பாதுகாப்பற்று, வாரிசற்று போய் விடுமோ' என அஞ்சினார்.
 
இதையடுத்து ஒரு குழந்தை பிறந்தது. இம்முறை ராஜா பெயர் வைக்க வந்த போது, ராணி அவரைத் தடுத்தாள்.
 
"உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வைக்கும் பெயர் சரியாக அமையவில்லை. நான் இவனுக்கு "அலர்க்கன்' என்று பெயர் சூட்டுகிறேன்,'' என்றாள். ராஜா அதிர்ந்து விட்டார். ஏனெனில், அந்தப்பெயருக்கு "பைத்தியக்கார நாய்'என்று அர்த்தம்.
 
"இவளுக்கு தான் பைத்தியம் பிடித்து விட்டதோ' என்று எண்ணிய அவர். ராணியிடம், ""நீ இப்படி செய்யலாமா?'' என்றார்.
 
நீங்கள் முதல் குழந்தைக்கு விக்ராந்தன் என்றும், அடுத்தவனுக்கு சுபாகு( வலிமை மிக்க தோள்களை உடையவன்) என்றும், மூன்றாமவனுக்கு சத்துருமர்த்தனன் (எதிரிகளை துவம்சம் செய்பவன்) என்றும் பெயர் வைத்தீர்கள். அந்தப் பெயருக்கேற்றாற் போல் அவர்களும் நடக்கவில்லை. அப்படியிருக்க, இவனுக்கு "பைத்தியம்' என்று பெயர் வைத்ததால், அவன் பைத்தியமாகி விடுவானா என்ன! தீ என்றால் நாக்கு சுட்டு விடாது. இந்தப் பெயரே இருக்கட்டும்,''  என அடித்துச் சொல்லி விட்டாள்.
 
ஒன்றும் புரியாத ராஜா, ""இவனையாவது அரசாள தயார்படுத்து. இவனையும் விட்டால் நாடாள யார் உள்ளனர்?'' என்றார்.
 
அதை ராணி ஏற்றுக் கொண்டாள். மகனுக்கும் அரசாளும் வித்தையைக் கற்றுக் கொடுத்தாள். அவன் பொறுப்பேற்றதும், ராஜாவும், ராணியும் காட்டுக்கு புறப்பட்டனர்.
 
மகனுக்கு ஒரு பதக்கத்தை அணிவித்த ராணி""மகனே! உனக்கு கஷ்டம் வந்தால் மட்டும் இந்த பதக்கத்திற்குள் இருக்கும் ஓலையை படித்துப் பார்,'' என்றாள். பலகாலம் கழிந்ததும், அவனுக்கு வாழ்வில் ஏதோ வெறுப்பு தட்ட, ஓலையை எடுத்துப் படித்தான். ""நீ பற்றற்றவனாக இரு, அப்போது ஆத்மஞானம் அடைவாய்,'' என்றிருந்தது. அதிலுள்ள உண்மையை அலர்க்கன் புரிந்து கொண்டான். அவனும் தவமிருக்ககாட்டுக்குப் போய்விட்டான்.
 
குழந்தைகள் அதிக ஆசையின்றி, ஒழுக்கமாக வளர இந்தக் கதையை மார்க்கேண்டய புராணத்தில் சொல்லி உள்ளனர்.

Cheers!

Tuesday, April 24, 2012

Ancient Stories # 24 - Liberation from worldly life

கண்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்?' என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான்.

""என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே "ஸ்ரீமத் பாகவதம்' என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா?'' என்றார் மந்திரி.

"அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும்.
 
பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள்,'' என்று உத்தரவு போட்டான்.
 
அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார். தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல...பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.
 
இரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை. அவன் பண்டிதரிடம்,""யோவ் பண்டிதரே! என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா! இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே! இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை...'' என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார்.
 
வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள்.
 
"அப்பா! இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள்? என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான்,'' என்றாள்.
 
"இவள் என்ன உளறுகிறாள்?' என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார். கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, ""பயப்படாதே! நானிருக்கிறேன்'' என்று சொல்வது போல் இருந்தது.
 
மறுநாள், மகளுடன் அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் அந்தச்சிறுமி,""மன்னா! நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன்,'' என்றதும், ""சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய்?'' என்றான் மன்னன் ஆச்சரியமாக.
 
"மன்னா! நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள்,'' என்றாள். அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர்.
 
"மன்னா! இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள்,'' என்றாள்.
 
"உனக்கு பைத்தியமா! கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்?'' என்ற மன்னனிடம்,""நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும். கண்ணனின் கதையைப் படித்தால் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா!'' என்றாள்.
 
மன்னன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மைநிலையை உணர்த்திய சிறுமியை வாழ்த்தினான். 

Cheers!

Monday, April 23, 2012

Ancient Stories # 23 - Kaalidas

காளியைத் திட்டும் தைரியம் யாருக்காவது உண்டா?
 
சுட்டெரித்து விடமாட்டாளா என்று சந்தேகம் வரும். ஆனால், அவளையும் திட்டித் தீர்த்தார் மகாகவி காளிதாஸ்.
 
காளிதேவி, தன் அருளால் காளிதாசரை மாபெரும் கவிஞராக்கினாள். அவர் போஜராஜனின் அரசவைப் புலவராக இருந்த போது, தண்டி, பவபூதி என்ற கவிஞர்களும் இருந்தனர். மூவருமே விடாக்கண்டன், கொடாக்கண்டனாக கவித்துவம் பெற்றவர்கள். ஒருசமயம், இம்மூவரில் யாருடைய புலமை உயர்ந்தது என்ற வாதம் ஏற்பட்டது. இதுபோன்ற சமயங்களில், தெய்வசந்நிதியில் தீர்ப்பு கேட்பது ராஜாக்களின் வழக்கம். போஜராஜனும் காளி சந்நதிக்கு வந்தான்.
 
தண்டியிடம் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் காளியின் குரல் அசரிரீயாகக் கேட்டது. காளிதாசரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே அவருக்கு கோபம் வந்து விட்டது. "அப்படியானால் என் திறமை என்னடி?'' என்று ஒருமையில் கோபமாகத் திட்டிவிட்டார்.
 
ஆனால், காளி அவரைப் பற்றியும் சொல்ல இருந்தாள். அதற்குள் காளிதாசர் அவசரப்பட்டு விட்டார்.
 
"மகனே காளிதாசா! அவசரக்குடுக்கையாக இருக்கிறாயே! நான் மற்றவர்களின் பாண்டித்யம் பற்றியே மெச்சினேன். 

"த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய' என்று உன்னைப் பற்றி சொல்வதற்குள் என்ன அவசரம்?'' என்றதும், காளிதாசர் அழுதே விட்டார்.
 
ஏன் அழுதார் தெரியுமா?
 
அந்த ஸ்லோகத்தின் பொருள் தெரிந்தால், காளியின் கருணையைப் பார்த்து நீங்களும் ஆனந்தக்கண்ணீர் பெருக்குவீர்கள்.
 
""நீதானே நான் நீதானே நான் நீதானே நான்' என்பதே அதன் பொருள். நீயும், நானும் ஒன்றான பிறகு உனக்கு மிஞ்சியபுலவனேது'' என்றாள் காளி.
 
அந்தக் கருணைக்கடலில் விஜயதசமியன்று உங்கள் கோரிக்கையை வையுங்கள். வெற்றி உங்களுக்கே.

Cheers!

Sunday, April 22, 2012

Ancient Stories # 22 - Sakunthalai

தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரால் தனது தேவலோக தலைவர் பதவி ஆட்டம் கண்டுவிடும் என்று கருதிய இந்திரன், மேனகையை அனுப்பினான். அந்த மயக்கத்தில் பிறந்த மகளே சகுந்தலை.
 
குழந்தையைக் காட்டில் விட்டுச்சென்றனர். அவளை பறவைகள் வளர்த்ததாம். "சகுந்த' என்றால் "பறவை'. "அலை' என்றால் "வளர்க்கப்பட்டவள்'. "பறவைகளால் வளர்க்கப்பட்டவள்' என்பதால் இப்படி ஒரு பெயர் இயற்கையாகவே அமைந்தது. பிறகு கண்வமகரிஷி அவளை வளர்த்தார்.
 
அவளை பார்த்த துஷ்யந்தன் காந்தர்வ மணம் செய்தான். அவள் கர்ப்பமானாள். ஒரு மோதிரத்தை பரிசாக அளித்து விட்டு கிளம்பினான். செல்லும்வழியில், சகுந்தலாவின் ஞாபகத்தில் ஒரு முனிவரை அவமதித்தான். ""என்னைக் கண்டுகொள்ளாமல், எந்தப் பெண்ணின் மதிமயக்கத்தில் சென்றாயோ, அவளை மறந்து போ,'' என அவர் சாபமிட்டார். சகுந்தலையை மறந்தான்.
 
சகுந்தலா ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு "பரதன்' என்று பெயர். அவனது பெயரால் தான், நம் தேசம் "பரதகண்டம்' என பெயர் பெற்று"பாரதம்' என மாறியது. 

அவள் தன் கணவனைத் தேடி வந்தாள். அவனோ, அடையாளம் தெரியாமல் அவளைத் திட்டினான். அவள் தன் மனைவியல்ல என்று சத்தியம் செய்தான்.
 
"மன்னா! சத்தியத்தை எவன் கடைபிடிக்கிறானோ அவனே உயர்ந்தவன். இதோ, நீங்கள் அணிவித்த மோதிரம், இதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறதா?''என காட்டினாள். அந்த நேரத்தில் சாபவிமோசனம் கிடைக்க,அவளை அடையாளம் கண்டு மகிழ்ந்தான்.
 
சத்தியம் என்றும் வெற்றி பெறும். "சத்யமேவ ஜயதே!" "வாய்மையே வெல்லும்' என்று இன்று நம் அரசுகள் பயன்படுத்தும் மொழிகள் பிறந்தது இவர்களால் தான்!

Cheers!

Saturday, April 21, 2012

Ancient Stories # 21 - Do you go to sleep during spiritual discourses

கதை கேட்கும்போது தூக்கம் வருதா?
 
ராமாயணக் கதைகேட்கச் செல்பவர்கள் தூங்காமல் கதைகேட்க வேண்டும். ஆனால், சிலர் தன்னையும் மீறி தூங்கிவிடுவதுண்டு. 

ராமாயண கதாகாலட்சேபம் நடக்கும்போது யாருக்குத் தூக்கம் வரும் என்பதை அறிந்து கொண்டால் இனிமேல் தூக்கமே வராது. 

அசோகவனத்தில் இருந்த சீதை ஒரு கட்டத்தில் தன் உயிரையே விடத் தீர்மானித்து விட்டாள் . அனுமன் ஒரு நாள் கழித்து வந்திருந்தாலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால், அனுமன் அசோகமரத்தின் மீது அமர்ந்து ராமனின் பெருமையை தன் இனிமையான குரலில் பாடத் தொடங்கினான். அந்த ராகத்திற்கு ""ஹனுமதோடி'' என்று பெயர்.
 
ராமனின் புகழ்பாடும் இந்த ராகத்தைக் கேட்க ஆரம்பித்ததும் அரக்கிகள் உறங்கத் தொடங்கினார்கள். சீதையோ ரசித்துக் கேட்டு உயிர் பிழைத்தாள். 

இதனால் ராமாயணக்கதை கேட்கும் போது உறங்குபவர்கள் ராட்சஷகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

ராமாயணம் மட்டுமல்ல! எந்த பக்திநூலைப் படித்தாலும், சொற்பொழிவைக் கேட்டாலும், மனம் ஒன்றிகேட்டால் தூக்கம் வராது. 

Cheers!

Friday, April 20, 2012

Ancient Stories # 20 - Try to see only the positive in others

பிளஸ் பாயின்ட்டை மட்டும் பாருங்க!

பூலோகத்தில் வசித்த கிருஷ்ண தேவன் என்ற அரசனைப் பற்றி தேவலோகத்தில் ஒருநாள் வாதம் வந்தது.

"அந்த அரசன் மிகவும் உயர்ந்தவன், குணசீலன், தேவர்களான நமக்குள் கூட பூசல் உருவாகிறது. ஆனால், அவனோ பிறரிடம் உள்ள நல்லவற்றை மட்டுமே பார்க்கிறான்,'' என்று புகழாரம் சூட்டினான் தேவேந்திரன்.
 
ஒரு பூலோகவாசியை தேவேந்திரன் புகழ்ந்தது, அங்கிருந்த ஒரு தேவனுக்கு பிடிக்கவில்லை. உண்மையிலேயே, கிருஷ்ணதேவன் நல்லவன் தானா என சோதிக்க பூலோகம் வந்தான். தேரில் அடிபட்டு இறந்து போன நாயின் வடிவெடுத்து அழுகிய உடலுடனும், கோரமான பற்கள் வெளியே தெரியும்படியும் அரசன் வரும் வழியில் படுத்திருந்தான்.
 
கிருஷ்ணதேவன் அந்தப் பக்கமாக வந்தான்.
 
"ஐயோ! இந்த நாயின் பற்கள் எவ்வளவு வெண்மையாக வரிசையாக இருக்கின்றன. இது வாழ்ந்த காலத்தில் இன்னும் அழகாக இருந்திருக்குமே,'' என புகழ்ந்தான். நாயின் சிதைந்த தோற்றம், அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பற்றி அவன் பேசவே இல்லை. படுத்திருந்த நாய் சுயரூபத்தில் எழுந்தது. தன் முன் ஒரு தேவன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட கிருஷ்ணதேவன், ""தாங்கள் யார்? இறந்த நாயின் வடிவத்தில் ஏன் கிடந்தீர்கள்?'' என்றான்.
 
"கிருஷ்ணா! நிஜத்தில் நீ மிகவும் நல்லவன். மற்றவர்களின் குறைகளை விட, அவர்களிடம் உள்ள நிறைகளை யார் காண்கிறார்களோ அவர்களே இந்த உலகில், பொறாமையற்றும், கவலையற்றும் நிறைவான வாழ்வு நடத்துகிறார்கள். உன்னைப் போன்றவர்கள் பூலோகத்தில் பெருகட்டும்,'' என்று ஆசிர்வதித்து மறைந்தான்.
 
பிறரிடம் உள்ள பிளஸ் பாயின்ட்களை மட்டுமே இனி பார்ப்போமா! 

Cheers!

Thursday, April 19, 2012

Ancient Storie # 19 - Who is Gugan?

கங்கைக் கரையில் குடில் அமைத்திருந்த முனிவருக்கு ஒரு சீடன் இருந்தான். அவனுக்கு "ஓம் முருகா' என்னும் மந்திரத்தை அவர் உபதேசித்திருந்தார். எதை மறந்தாலும் மந்திரம் ஜெபிக்க அவன் மறந்ததில்லை.
 
ஒருமுறை முனிவர் இமயமலைக்கு யாத்திரை புறப்பட்டார். வழக்கமான பூஜைகளை சீடன் நடத்தி வந்தான். இந்த சமயத்தில், அந்நாட்டு மன்னன் கவலையுடன் முனிவரைத் தேடி வந்தான். மன்னனை வணங்கிய சீடன், ""மன்னா! உங்கள் கவலை எதுவானாலும் என்னிடம் சொல்லுங்கள். தீர்வு சொல்கிறேன். நோய் தீர மருந்து தான் தேவை. ஆள் முக்கியமில்லை ,'' என்றான். 

சிறுவனின் பேச்சில் நம்பிக்கை பெற்ற மன்னன், ""விலங்கைக் கொல்ல நான் செலுத்திய விஷ அம்பு, அந்தணர் ஒருவரைக் கொன்றுவிட்டது. அந்தப் பாவம் தீர வழிகாட்டவேண்டும்,'' என்றார்.
 
"கவலைவேண்டாம். கங்கையில் நீராடி, வடக்கு நோக்கி இருகரம் குவித்து மூன்று முறை "ஓம் முருகா' என்று உள்ளம் உருகி ஜெபியுங்கள்,'' என்றான். மன்னனும் அதைச் செய்து பாவநிவர்த்தி பெற்றான்.
 
யாத்திரை முடித்து முனிவர் திரும்பினார். மன்னனுக்கு தான் செய்த பரிகார விபரத்தை சீடன் அவரிடம் சொன்னான். மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக, முனிவர் கோபம் கொண்டார். ""ஒருமுறை ஓம் முருகா என்றாலே ஆயிரம் தோஷங்கள் நிவர்த்தியாகுமே. மூன்று முறை ஏன் சொல்ல சொன்னாய்? உனக்கு அம்மந்திரத்தின் மகிமை தெரியவில்லை. நீ அடுத்த ஜென்மத்தில் கங்கைக்கரையில் வேடனாகப் பிறப்பாய்,'' என்றார்.
 
அந்தச் சீடனே, கங்கைக்கரையில் குகனாகப் பிறந்து ராமனுக்கு உதவி செய்யும் பாக்கியம் பெற்றான். குகன் என்பது முருகனின் பெயர்களில் ஒன்றாகும். பக்தர்களில் மனக்குகையில் வசிப்பவன் என்பது பொருள். 

Cheers!

Wednesday, April 18, 2012

Ancient Stories # 18 - To be Blessed with a Child

புத்திர விரதம் 

குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை சஷ்டி விரதமிருந்து வழிபடுகிறார்கள். இதற்கான காரணத்தை புராணங்கள் விளக்குகிறது.

கஷ்யப முனிவருக்கு அதிதி என்னும் மனைவி மூலம் தேவர்கள் பிறந்தனர். இவர்கள் ஆதித்யர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். திதி என்னும் மனைவி மூலம் அசுரர்களாகிய தைத்தியர்கள் பிறந்தனர். தேவர்கள் நற்குணம் உள்ளவர்களாகத் திகழ்ந்தனர். சித்தியின் பிள்ளைகளான தைத்தியர்கள் மீது தேவர்கள் பாசம் கொண்டிருந்தனர். ஆனால், தைத்தியர்களோ, தங்கள் தேவ சகோதரர்களை வெறுத்தனர். இருவருக்கும் கடும் போர் ஏற்பட்டது. அசுரர்கள் நல்லவர்களான தேவர்களைத் தாக்கவே, திருமால் கோபம் கொண்டார்.
 
பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமிர்தத்தைக் குடித்தால், இறப்பே இல்லாத சூழல் அமையும் என்று தேவர்களுக்கு சொன்னார். இந்தத் தகவல் அசுரர்களின் காதுக்கும் போகும்படி செய்தார். இருதரப்பாரும், கிடைப்பதில் பாதியைப் பகிர்ந்து கொள்வதென ஒப்பந்தம் செய்து கடைந்தனர்.மாயங்கள் செய்யும் திருமாலோ, மோகினி வடிவமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தம் முழுவதையும் கொடுத்து விட்டார்.
 
சக்தியிழந்த அசுரர்களை தேவர்கள் அடித்து நொறுக்கினர். அசுர வம்சமே அழிந்து விட்டது.
 
இதனால் திதி வருத்தமடைந்தாள். தன் கணவர் காஷ்யபரிடம்,""அன்பரே! எனக்கு பிள்ளைகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. புத்திர பாக்கியம் அருளுங்கள்,'' என வேண்டிக்கொண்டாள். 

கஷ்யபரும் அவளது தாயுள்ளத்தைப் புரிந்து கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். சிவனுக்கு 274, பெருமாளுக்கு 108 தலங்கள் என்று இருப்பது போல, முருகனுக்கு 64 முக்கியத்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அதில் சிறந்ததான கதிர்காமம் என்ற இடத்துக்கு அவர் சென்றார். யாகத்தைத் துவங்கினார். 

திதிக்கு மீண்டும் குழந்தைகள் பிறந்தால், நிலைமை என்னாகுமோ என்று தேவர்கள் பயந்தனர். யாகத்தை அழிப்பதற்காக பல இடையூறுகளைச் செய்தனர். இதனால், வருத்தமடைந்த காஷ்யபர், அத்தலத்தில் இருந்த சுப்பிரமணியப் பெருமானை வேண்டினார்.
 
"சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம்' என்று மும்முறை சொல்லவே முருகப்பெருமான் அங்கு எழுந்தருளினார்.
 
"கஷ்யபரே! கவலை வேண்டாம். தேவர்களால் இனி தங்களை ஏதும் செய்ய முடியாது. இதோ, எனது வல்லபம், வேல் ஆகிய ஆயுதங்களை தங்கள் யாகசாலையை சுற்றி நிறுத்துகிறேன். அவற்றை மீறி எந்த சக்தியாலும் தங்களை அழிக்க முடியாது,'' என அருள்பாலித்தார்.
 
கஷ்யபர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. யாகத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த தேவர்கள், சுப்பிரமணியப் பெருமானிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லாமல், மிகுந்த ஆணவத்துடன் தங்களால் எல்லாம் முடியும் என்ற தைரியத்தில் அவர்களும் ஒரு யாகத்தை துவங்கினர். அந்த யாக குண்டத்தில் இருந்து மாரன், மலையன் என்ற அசுரர்கள் தோன்றினர்.
 
அவர்களிடம், ""மார மலையர்களே! நீங்கள் புத்திரகாமத்தில் யாகம் செய்து கொண்டிருக்கும் கஷ்யபருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆயுதங்களை தகர்ப்பதுடன், அவரது வேள்விக்குண்டத்தையும் அழித்து விடுங்கள்,'' என உத்தரவிட்டு அனுப்பினர்.
 
மாரனும் மலையனும் புத்திரகாமத்தை வெகு விரைவில் அடைந்தனர். ஆனால், அவர்களை முருகப்பெருமானின் ஆயுதங்கள் தடுத்து விட்டன. அவர்கள் தூரத்தில் நின்றபடியே வேள்விகுண்டத்தை அழிக்க முற்பட்ட போது, கஷ்யபர் மீண்டும் குமரப்பெருமானை உருக்கமாக வேண்டி அழைத்தார்.
 
முருகப்பெருமானும் அங்கு தோன்றி, மார மலையர்களைக் கொன்றார்.
 
"கஷ்யபரே! தங்கள் யாகம் வெற்றி பெறட்டும். தங்களுக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு சிவஞானத்தை ஊட்டி முக்திக்கு வழி காட்டுங்கள்,'' என்று அருள் செய்தார். கஷ்யபர் அந்த இடத்தில் முருகன்சிலையைப்பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

Cheers!

Tuesday, April 17, 2012

Ancient Stories # 17 - Compassionate Lord Krishna

இல்லை என்றாலும் அருள்வான்

அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.

அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
 
"அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்?'' எனச் சொல்ல, ""போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன்,'' என பீமன் வம்புக்குப் போக, ""இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன்,'' என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ""ஏன்...அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன்,'' என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி.
 
எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான்.
 
"கண்ணா! மாயம் செய்கிறாயா?'' என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
 
"இல்லை..இல்லை...என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள்,'' என்றான் கருணையுள்ள கண்ணன். 

தன்னை இல்லை என்று சொல்பவர்க்கும் இறைவன் அருள் செய்கிறான் என்பது தான் இந்தக்கதை சொல்லும் நீதி. 

Cheers!

Monday, April 16, 2012

Ancient Stories # 16 - Guru Bhakti

பிறர் சுகமே நம் சுகம்
 
வைஷ்ணவ ஆச்சார்யார் எம்பாரிடம் ஒரு வழக்கம் உண்டு. தனது குருநாதரான திருமலை நம்பிகளுக்கு அவர் தான் தினமும் படுக்கை விரித்துக் கொடுப்பார். அவ்வாறு விரித்ததும், அதில் தானே படுத்து ஒன்றிரண்டு முறை உருளுவார். இதை ராமானுஜர் பார்த்துவிட்டார்.

"ஒரு சீடன் குருநாதரின் படுக்கையில் படுத்து உருளலாமா? இது நல்ல பழக்கம் இல்லையே!'' என கலங்கினார். இதுபற்றி திருமலை நம்பிகளிடமே சொல்லிவிட்டார்.
 

நம்பிக்கும் அந்த விஷயம் அப்போது தான் தெரிய வந்தது.
 

"எம்பார்! நீ என் படுக்கையில் தினமும் புரண்டு எழுகிறாயாமே! இது அபச்சாரம் என்று உனக்கு தெரியாதா! இதற்கு என்ன தண்டனை கிடைக்குமென தெரியுமா?'' என்று கடிந்து கொண்டார்.
 

எம்பார் மிகப்பணிவுடன், ""ஐயனே! இந்த அபச்சார செயலுக்கு எனக்கு நரகம் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியும். ஆனாலும், தாங்கள் படுக்கையில் படுக்கும் போது, ஏதாவது குத்தி, தங்கள் திருமேனிக்கு நோவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், படுக்கையை சோதிக்கவே அவ்வாறு செய்தேன்,'' என்றார்.
 

எம்பாரின் குருபக்தி ராமானுஜரை மட்டுமல்ல! திருமலைநம்பியையும் நெகிழ வைத்தது. அவரை அவர்கள் வானளாவ புகழ்ந்தார்கள். தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, பிறர் சுகமே தன் சுகம் என வாழ்ந்தார்களே! அந்தப் பெரியவர்களின் வாழ்க்கையை நமதுவாழ்விலும் முன்னுதாரணமாகக் கொள்வோம். 

Cheers!

Sunday, April 15, 2012

Ancient Stories # 15 - Parents need to be responsible

பெற்றோர் கையில்தான் எல்லாம்!
 
அரசன் ஒருவன் தன் மகனை குருகுலத்துக்கு அனுப்பி வைத்தான். மற்ற மாணவர்களுடன் அவன் சமமாக அமரமாட்டான். குரு அமர்ந்திருக்கும் மரத்தடி திண்டில் உட்கார்வான். ஆசிரியரை தனது அடிமை போலவே அவன்
கருதினான். அரசனின் மகன் என்ற கர்வம் அவனை ஆட்டிப்படைத்தது. 

இதுபற்றி அறிந்த அரசன், குருவுக்கு ஒரு ஓலை எழுதினான்.

"குருவே! நீங்கள் என் மகன் என்ற காரணத்துக்காக ச<லுகை அளித்தால் குழந்தை கெட்டுப் போவான். மற்ற மாணவர்களைப் போலவே அவனை நடத்துங்கள். மாணவனுக்கு சலுகை தரும் ஆசிரியரும், பிள்ளைக்கு செல்லம்
கொடுக்கும் தந்தையும் சமூகத்திற்கு ஆகாதவர்கள். அவனது எதிர்காலம் நம் இருவர் கையிலும்,'' என எழுதியிருந்தான்.

இதைப்படித்த ஆசிரியர், இளவரசனிடமே அதைக் கொடுத்தார்.

இனி, தன் ஜம்பம் எடுபடாது, தந்தையாரே தனக்கு சாதகமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்ட இளவரசன், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியருக்கு தக்க மரியாதை தந்து பாடம் கற்றான்.

இப்போதெல்லாம் சில பிள்ளைகள் செய்யும் கூத்தை, பெற்றோர் கண்டுகொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்தக்கதை. 

Cheers!

Saturday, April 14, 2012

Ancient Stories # 14 - Origin of Rudraksha

சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். 

திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். "அகோர அஸ்திரம்' என்ற ஆயுதத்தை தயார் செய்ய கண்களை மூடும்போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். 

ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.

Cheers!

Friday, April 13, 2012

Ancient Stories # 13 - Avvaiyar (ஔவையார்)

சுவாமி முன் கால் நீட்டியவள் 
அவ்வைப்பாட்டி ஒருமுறை கயிலாயத்திற்கு நடந்தே சென்றாள். களைப்பு தாங்காமல், சிவபார்வதியின் முன் கால் நீட்டி அமர்ந்தாள். சுவாமி அதுபற்றி ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், தேவிக்கோ கோபம் வந்துவிட்டது.

சிவபெருமானிடம், ""சுவாமி! அகில உயிர்களுக்கும் தலைவரான உங்களை நோக்கி இந்த மூதாட்டி கால்நீட்டியிருக்கிறாளே!'' என்று சிடுசிடுத்தாள். 

சுவாமி அவளிடம், ""பார்வதி! இதுபற்றி நீயே கேட்டுவிடு,'' என்று பதிலளித்தார்.
 
உமையவளும், ""அவ்வையே! நீ செய்வது சரிதானா? சுவாமிக்கு நேராக காலை நீட்டியிருக்கிறாயே!'' என்றாள்.
 
அவ்வைப் பாட்டியோ, ""தேவி! என் அப்பன் சிவன் எத்திசையில் இல்லை என்று சொல்! அத்திசையில் காலை நீட்டிக் கொள்கிறேன்,'' என்று பவ்யமாக பதில் கொடுத்தாள். 

உமையவள் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தாள். எங்கும் சிவனின் அருள் உருவம் அம்பிகையின் கண்களுக்குத் தெரிந்தது. இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்த ஈசனே விளையாடிய நாடகம் இதுவென்பதை தேவி உணர்ந்தாள். 

Cheers!

Thursday, April 12, 2012

Ancient Stories # 12 - Birth of Srimad Bhagavatam

பாகவதம் பிறந்த கதை
 
வேதங்களை தொகுத்து நான்காக வகைப்படுத்தியவர் வேத வியாசர். 

பைல முனிவர் மூலம் ரிக், வைசம்பாயனர் மூலம் யஜுர், ஜைமினி முனிவர் மூலம் சாமம், சுமந்து மூலம் அதர்வணம் என, சிஷ்ய பரம்பரை முறையில் வேதங்களைக் கற்பிக்க வழி செய்தார். 

வேதங்களின் உட்கருத்துகளை, பாமரர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் 18 புராணங்களை இயற்றினார். எனினும், இந்த உலகம் வேதங்கள் உணர்த்தும் தர்மநியாயத்தைப் பின்பற்றுமா என்ற சந்தேகம் இருந்தது. இதன் காரணமாக அவரது மனதில் அமைதி இல்லை. 

இதை நாரதரிடம் கூறினார். அவர், வியாசரிடம், ""முனிவரே! புராணங்களையும், சாஸ்திரங்களையும் மட்டுமல்லாது பகவானுடைய பூரண குணங்களையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு திருப்தி ஏற்படும். எனவே, பகவானின் கல்யாண குணங்களைக் குறிக்கும் ஒரு நூலை இயற்றுங்கள்,'' என்றார். 

அதன்படி தன் புத்திரர் சுகப்பிரம்மரிடம் ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலை இயற்றுமாறு அருளினார். திருமாலின் திவ்யலீலைகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

Cheers!

Wednesday, April 11, 2012

Ancient Stories # 11 - Everyone is equal before God

எல்லாரும் ஒன்று தான்!

லோகசாரங்கர் என்பவர் காவிரியில் புனிதநீர் எடுத்து, ரங்கநாதப்பெருமானுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்ய கொண்டு செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். ஜாதியால் பிற்படுத்தப்பட்ட திருப்பாணாழ்வார் தினமும் கரையில் நின்றபடியே மனக்கண்ணால் ரங்கநாதரைத் தரிசிப்பார். லோகசாரங்கர் தண்ணீர் எடுத்து வருவதைப் பார்த்தால் ஒதுங்கி நின்று கொள்வார்.
 
ஒருநாள், திருப்பாணாழ்வார் ரங்கநாதரின் சிந்தனையில், தன்னை மறந்து நின்று கொண்டிருந்தார். லோகசாரங்கர் தூரத்தில் வரும்போதே, அவரை ஒதுங்கி நிற்கும்படி சப்தமிட்டார்.
 
தன்னையே மறந்து நின்ற ஆழ்வார், திரும்பக்கூட இல்லை. உயர்குடியில் பிறந்த தன்னை அவர் அவமதிப்பதாக நினைத்த லோகசாரங்கர், கல்லை எடுத்து வீசினார்.
 
அவரது நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. அந்த நிலையிலும் கூட அவர் கண்விழிக்கவில்லை. சிந்தனை கலைந்த பிறகு தான் ரத்தம் வழிவதையே அவர் கவனித்தார்.
 
சந்நிதிக்குள் சென்ற சாரங்கர் பெருமாளைப் பார்த்தார்.
 
பெருமாளின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ""என் பக்தனின் நெற்றியைக் காயப்படுத்தினாயே சாரங்கா!'' என்று அவர் சொல்லவே, லோகசாரங்கர் அடித்துப் புரண்டு வெளியே வந்தார். திருப்பாணாழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு, ""பெருமாளின் உண்மை பக்தரான உம்மை என் தோளில் சுமந்து சந்நிதிக்கு அழைத்துச் செல்வேன்,'' என்றார். 

ஆழ்வார் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. தோளில் சுமந்து சென்றார். பெருமாளைக் கண்ட திருப்பாணாழ்வாரின் மகிழ்ச்சிக்கு எல்லைக்கோடு இருந்திருக்குமா என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லையே! 

Cheers!

Tuesday, April 10, 2012

Ancient Stories # 10 - Karma

நினைத்ததை நடத்துபவர் 
 
ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.

தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், ""இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை,'' என்றார்.
 
இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். பார்வதி சிவனிடம், ""மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது'' என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி?
 
சிவன் பார்வதியிடம்,"" நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு,'' என சொல்லிவிட்டு சென்றார்.
 
சனீஸ்வரனிடம் சென்று," "தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன்,'' என்றார்.
 
சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, ""பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன்,'' என்றார்.
 
"எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்!'' என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. "ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே!' என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள்.
 
சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். 

Cheers!

Monday, April 9, 2012

Ancient Stories # 9 - Birth of Lord Hanuman

அனுமன் பிறந்த கதை!

ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. 

பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார். தனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள்.
 
எனவே, ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார்.
 
புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள். .
 
"ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ,'' என சாபமிட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள்.
 
அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, ""பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்,'' என்ற வரம் அளித்தார்.
 
அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு "அஞ்ஜனை' என்ற பெயர். "கேஸரி' என்றால் "சிங்கம்'. "அஞ்ஜனை' என்றால் "மை பூசிய பேரழகி'. ஒருநாள்,
 
அப்சரஸாக உருமாறி ஒரு மலைச் சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.
 
அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். தன்னை அணைப்பதை உணர்ந்த அவள், அணைப்பது யார் என தெரியாமல் ""ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது,'' என கதறினாள்.
 
அப்போது வாயுபகவான் காட்சியளித்து""பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை. மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய்,'' என சொல்லி மறைந்தார்.
 
அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு "மாருதி' என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.

Cheers!

Sunday, April 8, 2012

Ancient Stories # 8 - Respect your Motherland

பிறந்த நாடே சிறந்த கோயில்

ராவணனை அழித்த பிறகு ராமபிரான் அயோத்திக்கு கிளம்பினார்.
 
லட்சுமணன் அவரிடம்,""அண்ணா! தங்கள் சார்பில் அயோத்தியை பரதன் சிறப்பாக ஆண்டு கொண்டிருக்கிறான். நீங்கள் அங்கு சென்று. அவனது ஆட்சிக்கு வீணாக ஏன் தொந்தரவு தர வேண்டும்! எனவே, நீங்களே இலங்கையின் அரசனாகி விடுங்கள். அயோத்தியை விட இலங்கை செல்வத்தில் உயர்ந்தது. சொர்க்கத்தைப் போன்ற அழகுள்ளது. அது மட்டுமல்ல! உங்கள் ஆட்சியில் இங்குள்ள மக்கள் இனியாவது மகிழ்ச்சியுடன் வாழட்டுமே!'' என்றான்.
 
ராமபிரான் அவனை அருகில் அழைத்து,""தம்பி! நீ புரியாமல் பேசுகிறாய். உன் தாய் ஏழையாக இருக்கலாம், பார்வை இல்லாதவளாக இருக்கலாம். மற்ற பெண்களைப் போல கல்வி அறிவில்லாதவளாகவும், அழகில்லாதவளாகவும் கூட இருக்கலாம். அதற்காக, அவளை உன் தாய் இல்லை என்று மறுத்து விட முடியுமா! 

கல்வியும், அழகும், பணமும் கொண்டிருக்கும் பெண்களெல்லாம் உனக்கு தாயாகி விட முடியுமா? தாயும், தாய்நாடும் ஏழ்மையில் இருந்தாலும், அதற்காக ஒருவன் அதை துறந்து விடக்கூடாது. இந்த உடல் அயோத்தியில் பிறந்தது. அந்த மண்ணில் விளைந்த உணவுப் பொருட்கள் தான் இந்த உடம்பை வளர்த்தது. எனவே, இந்த உடல் அயோத்தி மண்ணில் தான் மடிய வேண்டும்,'' என்றார்.
 
சொந்த மண்ணை மதிக்க வேண்டும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் உண்டா என்ன! 

Cheers!

Saturday, April 7, 2012

Ancient Stories # 7- The Lord came to the Rescue

அவரே வந்தார் அழைத்துச் சென்றார்

இசை மாமேதை, சத்குரு தியாகராஜ சுவாமிகள் மிகச்சிறந்த ராமபக்தர். ஒருநாள், அவரது கனவில் தோன்றிய ராமபிரான், ""தியாகராஜரே! உமக்கு இன்னும் ஒரு பிறவி இருக்கிறது?'' என்றார்.
 
அதிர்ந்துவிட்டார் தியாகராஜர்.
 
"இன்னுமா பிறவி? ஏனப்பா, என்னை இப்படி சோதிக்க நினைக்கிறாய். விட்டு விடு! உன்னோடு ஐக்கியமாக வேண்டும் என்பதே என் நோக்கம்,'' என கண்ணீர் வடித்தார்.
 
பக்தன் கண்ணீர் வடித்தால் ராமனுக்குப் பொறுக்குமா?
 
"சரி..சரி..ஒரு வாய்ப்பு தருகிறேன், பிடித்துக் கொள்வீரா?''
 
"உடனே சொல் ராமா!''
 
"இன்றே சந்நியாசம் ஏற்க வேண்டும். பிறவாநிலை தந்துவிடுவேன்,''.
சுவாமிகள் மகிழ்ந்தார். மறுநாள் காலை சந்நியாசம் ஏற்றார். கீர்த்தனை ஒன்றைப் பாடியபடியே, சீடர்களை அழைத்தார்.
 
"இன்று நான் முக்தி பெறப்போகிறேன்,'' என்றார். சீடர்கள் அதிர்ந்தார்கள்.
தகவலைமுக்கியமானவர்களுக்குச் சொல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தார்கள்.
 
குறிப்பிட்ட நேரம் வந்தது. தீபாராதனை காட்டச் சொன்னார். ""ஜானகீ காந்த
ஸ்மரணே!'' (ஜானகியின் மணாளனான ராமனை வணங்குகிறேன்) என்றபடியே கண் மூடினார். ராமனின் பாதார விந்தங்களில் (திருவடித்தாமரை) சரணடைந்தார்.
 
மகான்களை அழைத்துச்செல்ல தெய்வமே நேரில் வருகிறது. நாமும் ராமநாமம் சொல்லியபடியே காத்திருப் போம், பிறவாநிலை பெற்று பரமானந்தம் பெறப்போகும் நன்னாளுக்காக! 

Cheers!

Friday, April 6, 2012

Ancient Stories # 6 - Why Black for Sani Baghavan

இவர் கருப்பான கதை

தன் மனைவி தமயந்தி, காட்டில் தன்னுடன் கஷ்டப்படுவதைப் பார்த்து, நளன் கண்ணீர் வடித்தான். அவளை ஒருவழியாக பிரிந்து விட்டான். 

அவன் தனியாக காட்டிற்குள் சென்ற போது, ஓரிடத்தில் நெருப்பு பற்றி எரிவதைக் கண்டான். அதற்குள் சிக்கிக் கொண்டிருந்த பாம்பு""ஐயோ! காப்பாற்று!'' என்று கதறியது. இரக்கப்பட்ட நளன் பாம்பைத் தூக்க, அது அவனைக் கடித்து விட்டது. நளனின் நிறம் கருப்பாகி விட்டது. 

"உன்னைக் காப்பாற்றிய என்னைக் கடித்து விட்டாயே!'' என நளன் வருந்தினான். ""எல்லாம் நன்மைக்கே,'' என்ற பாம்பு நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை எடுத்துச்சொல்லி மறைந்து விட்டது. 

பாம்பின் விஷம் நளனின் உடலுக்குள் புகும்போது, அவனைப் பற்றியிருந்த சனீஸ்வரனும் அவஸ்தைப்பட்டார். ஒரு நல்லவனைப் பிடித்ததால் சனிக்கே சோதனை வந்து விட்டது. அவரும் அந்த விஷத்தால் கருப்பாகி விட்டார். இதனால் தான், சனிக்கு கருப்பு வஸ்திரம், கருப்பு எள், நீலக்கல் ஆகியவை ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 

Cheers!

Thursday, April 5, 2012

Ancient Stories # 5 - Moksham

சுவாமி! கயிலைமலைக்கு வந்து யாத்திரை முடிப்பவர்களுக்கு புண்ணிய கதி கிடைக்கிறது. காசி வந்து கங்கையில் நீராடி விஸ்வேஸ்வர தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கிறது. ஆனால், இப்படி ஏதும் செய்ய முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்ள முடியாத பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கதி என்ன?'' என்று சிவனிடம் கேட்டாள் பார்வதிதேவி.

""உனக்குத் தெரிய வேண்டுமா? என்னுடன் வா!'' என்று காசிக்கு அவளை அழைத்துச்சென்றார் சிவன். பார்வதிதேவி ஒரு மூதாட்டியாக உருவத்தை மாற்றிக் கொண்டாள். சிவபெருமான் தொண்டுக் கிழவரானார். விஸ்வநாதர் கோயில் முன் குறுகலான சந்தில் அவர்கள் நின்றனர்.
 
கிழவருக்கு மூச்சு வாங்கியது. மனைவியின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டார். கிழவி போவோர் வருவோரைப் பார்த்து, ""ஐயா! அம்மா! என் கணவருக்கு உயிர் பிரியும்நிலை வந்துவிட்டது. யாராவது கொஞ்சம் கங்கை நீர் கொண்டு வந்துவாயில் விடுங்களேன். என்னால் எழுந்து போக முடியவில்லையே...'' என்று கை குவித்துக் கெஞ்சினாள்.
 
யாரும் உதவ முன்வரவில்லை. எல்லாருக்கும் அவரவர் காரியமே முக்கியமாக இருந்தது. காசிக்கு வந்தவர்கள் கங்கையில் நீராடப் போனார்கள். கங்கையில் நீராடியவர்கள் விஸ்வநாதரைத் தரிசனம் செய்யப் போனார்கள். கங்கை நீரைச் செம்பில் கொண்டு சென்றவர்கள், அதைக் கிழவரின் வாயில் ஊற்றி வீணாக்க விரும்பவில்லை.
 
இருட்டாகிவிட்டது. போவோர் வருவோர் குறைந்துவிட்டனர். ஒரு திருடன் வந்தான். அவன் கையில் இருந்த செம்பில் கங்கை நீர் இருந்தது. கிழவரின் நிலையைப் பார்த்து அவனது மனம் இரங்கிற்று. காவலர்கள் தன்னை அடையாளம் கண்டு, பிடித்துக் கொள்வார்களே என்ற பயமிருந்தாலும், மண்டியிட்டு அமர்ந்து கிழவரின் வாயில் கங்கை நீரை ஊற்றப் போனான்.
 
"ஐயா! கொஞ்சம் நில்லும். கங்கை ஜலம் ஊற்றியதும் இவரது உயிர் பிரிந்துவிடும். அதனால், உமது வாழ்க்கையில் செய்த நல்ல காரியம் ஏதேனும் ஒன்றைச் சொல்லியபடியே, அவர் வாயில் கங்கை நீரை விடும்!'' என்றாள் கிழவி.

அவன், எவ்வளவு யோசித்தாலும் நல்லது எதையும் நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. அப்படி எதையாவது செய்திருந்தால்தானே? அதேசமயம் பொய் சொல்லவும் மனம் துணியவில்லை.

"அம்மா! நான் இதுவரை நற்செயல் எதையுமே செய்ததில்லை. தீயசெயல்கள் நிறைந்த என் வாழ்க்கையில், முதல் தடவையாக இந்த நல்ல காரியத்தை செய்கிறேன்!'' என்று சொல்லிய படியே வாயில் கங்கை நீரை ஊற்றினான்.

அடுத்த நிமிடம், இறைவனும், அம்பாளும் உருவை மாற்றி, அந்தத் திருடனுக்குத் தரிசனம் கொடுத்தனர்.

"அன்பனே! உனக்கு முக்தி அளிக்கிறேன். உனக்கு அளிக்காமல் வேறு யாருக்கு அளிக்க முடியும்? உன் மனத்தில் இரக்கம் இருந்தது. கையில் கங்கை நீர் இருந்தது. வாக்கில் சத்தியம் இருந்தது. இதைவிட முக்தியைப் பெற வேறு என்ன தகுதி வேண்டும்?'' என்று கூறி மறைந்து போனார்.

ஒரே ஒரு உண்மையான நற்செயல் போதும். சொர்க்கம் கிடைத்து விடும் என்பது பார்வதிதேவிக்கு விளங்கிவிட்டது. 

Cheers!

Wednesday, April 4, 2012

Ancient Stories # 4 - Birth of Kuligai


குளிகை பிறந்த கதை

ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். 

""குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள்,'' என்றான்.

“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார் வேடிக்கையாக.

அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது.

“அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்,'' என்றான்.

சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.

""உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.

""நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.

இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது.

""சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.
 
"அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் பிரகஸ்பதியான குரு.
 
"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,'' என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார்.
 
குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.
 
இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.
 
"இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர்.
 
"யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும். மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,''என்றார் சனீஸ்வரர்.
 
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால் நன்மை ஏற்படும்.

Cheers!

Tuesday, April 3, 2012

Ancient Stories # 3 - Punishment

தவறுக்கு தண்டனை உறுதி 
 

மகாபாரத யுத்தத்தின் முடிவு சமயம்! பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

ஒரு ஞானியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 


அவர் தனது சாவுக்காக பயப்படுபவரும் அல்ல. கவுரவர்களுக்காக போர் செய்து தோற்றுப் போனதற்காகவோ, அவர்களின் மரணத்திற்காகவோ கலங்குபவரும் அல்ல! அப்படியானால், எதற்காக அழுகிறார் என்ற சந்தேகத்துடன் கிருஷ்ணர் அவரை அணுகினார். கவுரவர்களும், பாண்டவர்களும், திரவுபதியும உடன் நின்றனர்.

""மகாத்மாவே! ஏன் அழுகிறீர்கள்! ஞானியான தங்கள் கண்ணில் நீர் வழிகிறதென்றால், அதற்கு அர்த்தமில்லாமல் இருக்காதே!'' என்றார் கிருஷ்ணர்.


""கிருஷ்ணா! அறியாதவன் போல் பேசுகிறாயே! எவ்வளவோ இழப்புகள்! பாண்டவர்களுக்காக கடவுளின் அவதாரமாக நீயும் இருக்கிறாய். ஆனாலும், அவர்களின் கஷ்டம் தீரவில்லை, பிரச்னைக்கு முடிவும் கிடைக்கவில்லை. அதை நினைத்து அழுகிறேன்,'' என்றார்.


கண்ணன் பதிலேதும் சொல்லாமல் சிரித்தார்.
 

அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
 

சூதாட்டம் தவறு என்று தெரிந்தும் தர்மர் சூதாடினார். அதிலும், மனைவியை பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். இந்த கொடிய செயலுக்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டாமா! நாம் செய்யும் தவறை முழுமையாக உணரும் வரை, இறைவனின் தண்டனை தொடரும். அதை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Cheers!

Monday, April 2, 2012

Ancient Stories # 2 - Curse of Kamadenu


அருள் தரும் அன்பு

அயோத்தியை திலீபன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவன் ராமனின் முன்னோர்களில் ஒருவன். திருமணமாகி பல ஆண்டுகளாகியும், பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. பல தலங்களுக்குத் தீர்த்தயாத்திரை சென்று வந்தும் பயனில்லை. 

தன் குலகுரு வசிஷ்டரைச் சந்தித்து ஆலோசனை கேட்டான். அவனது முகக்குறிப்பைத் தெளிவாக உணர்ந்து கொண்ட வசிஷ்டர், ""திலீபா! ஏன் வாட்டத்துடன் இருக்கிறாய்?'' என்று கேட்டார்.
 
" குருவே! என்னிடம் செல்வம் இருந்தும் என்ன பயன்? பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே!''என்று வருந்தினான்.
 
கண்களை மூடி தியானித்த வசிஷ்டர், ஞானதிருஷ்டியால் விஷயத்தை அறிந்தார். "" திலீபா! தேவலோகத்திற்கு ஒருமுறை சென்றபோது, அங்கு தெய்வப்பசுவான காமதேனுவை வணங்காமல் அலட்சியம் செய்தாய். வருந்திய காமதேனு உன்னை சபித்துவிட்டது. அதனால் உனக்கு இக்கதி நேர்ந்தது,'' என்றார்.

"அறியாமல் பிழை செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள். காமதேனுவின் மனம் குளிர ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்,'' என்றான்.

" ஒன்றும் வருந்தாதே! காமதேனுவின் கன்றான நந்தினி, நமது ஆஸ்ரமத்தில் தான் இருக்கிறது. அதற்கு வேண்டிய உணவு, உறைவிடத்திற்கு ஏற்பாடு செய். கன்றின் மனம் குளிர்ந்தால் தாயின் மனமும் குளிர்ந்துவிடும்,"" என்றார் வசிஷ்டர்.

திலீபன், அரண்மனைக்கு நந்தினியை அழைத்துச் செல்லும் எண்ணத்துடன் தேடிச் சென்றான். ஆனால், நந்தினி அவன் கையில் சிக்காமல் ஓடத் தொடங்கியது. அதனைப் பிடிக்க விரட்டினான். ஆனால், அது சிக்கவில்லை. வெகுநேரம் விரட்டிச் சென்றதால் மிகவும்களைப்படைந்தான். வெயிலும் அதிகரித்தது. 

அங்கிருந்த மலைச்சாரலில் ஒரு மரம் மட்டும் இருந்தது. நிழ<லுக்காக, கன்று மரத்தடியில் ஒதுங்கியது. எதிர்பாராமல் புதரில் இருந்த சிங்கம் வெளிப்பட்டது. பயத்தில் கன்று வெலவெலத்துப் போனது. திலீபனும் கன்றைக் காப்பாற்ற முயன்றான். அப்போது சிங்கம் அசுரவடிவெடுத்தது, அவன் அட்டகாசமாகச் சிரித்தான்.

"மன்னவனே! என் பெயர் கும்போதரன். இம்மரம் எனக்குச் சொந்தமானது. யார் இந்த மரத்தை நெருங்கினாலும், அவர்களைக் கொன்று இரையாக்குவது என் உரிமை. அந்த வகையில் இக்கன்று எனக்கு இரையாகப் போகிறது. இதை தடுக்க உம்மால் முடியாது,'' என்று கர்ஜித்தான். 

எனவே, திலீபன் அசுரனுடன் சண்டையிட ஆரம்பித்தான். இருந்தாலும் களைப்பு காரணமாக அவனால் போரிட இயலவில்லை. கடைசியில், ""அசுரனே! என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள். இப்பச்சிளங்கன்றைக் கொல்லாதே!,'' என்று மன்றாடினான். அப்போது வானில் காமதேனு பசு தோன்றியது.

"திலீபனே! உன்னை பரீட்சிக்கவே இவ்விளையாடலைச் செய்தேன். ஒன்றும் பயப்படாதே. ஆணவத்தோடு அன்று அலட்சியம் செய்ததால், அதற்கான தண்டனையை அனுபவித்தாய். இப்போதோ, கன்றுக்காக மனமிரங்கி உயிரையும் தரத் துணிந்தாய். உள்ளத்தில் அன்பும், பணிவும் இருந்தால் கடவுளின் அருள் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள். உன் குலம் தழைக்க உனக்கு ஒரு குழந்தை பிறப்பான், '' என்று சொல்லி மறைந்தது.

அங்கிருந்த அசுரனும், நந்தினியும் கணப்பொழுதில் மறைந்தனர். மன்னன் திலீபன் தன் குலகுரு வசிஷ்டரிடம் நடந்ததைச் சொல்லி மகிழ்ந்தான். 

ஆகாயகங்கையைப் பூமிக்கு கொண்டு வந்தபகீரதன், திலீபனின் மகனாகப் பிறந்தான்.

Cheers!

Sunday, April 1, 2012

Ancient Stories # 1 - Lord of Kaliyuga

This month of April, I would like to focus on Ancient Stories in Tamil. Hope you will enjoy them. Here is the first one on Lord of Kaliyuga.
 
அவன் கேட்ட இடம்!

கலியுகம் துவங்கியதும், அதன் அதிபதியான கலிபுருஷன், அர்ஜுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜா முன் வந்தான்.

""மகாராஜா! நான் புதிதாக பூலோகம் வந்தவன். தங்க இடம் கொடுங்கள்,'' என்று கேட்டான்.
 
""உஹும்...உயர்ந்த மனநிலையுடன் ஆட்சிசெய்யும் என் நாட்டில் உனக்கு இடமில்லை,'' என்று மறுத்தான் பரீட்சித்து. ""அப்படி சொல்லாதீர்கள். நாடு முழுக்க பரவியிருக்க வேண்டுமென நான் கேட்கவில்லை. குறிப்பிட்ட இடத்தைச் சொல்லுங்கள்,'' என்று கெஞ்சினான்.

""சரி..மது அருந்தும் இடம், சூதாடுமிடம், மிருகங்களை வதை செய்யும் இடம், ஒற்றுமையில்லாத சகோதர, சகோதரிகள் இருக்குமிடம் ஆகியவற்றில் நீ தங்கலாம்,' 'என அனுமதித்தார் பரீட்சித்து.
 
""ஒரே நேரத்தில், நான்கு இடங்களில் தங்குவது கஷ்டம். ஏதோ, ஒரு இடத்தைக் குறிப்பிடுங்கள். அங்கே தங்கிக் கொள்கிறேன்,'' என்றான். பரீட்சித்து அவனிடம், ஒரு தங்கக் கட்டியைக் கொடுத்து, ""கலியே! நீ பணத்தில் தங்கியிரு. பணத்தில் நான் சொன்ன நான்கும் இருக்கிறது,'' என்றார். கலிக்கு ஏக சந்தோஷம்.
 
""நன்றி மகாராஜா! இந்த பணத்தில் நான் தங்குவேன். மக்களை அமைதி இழக்கச் செய்வேன். ஆயிரக்கணக்கானவர்கள் என் பிடியில் இருப்பார்கள். அவர்களிடையே கலகத்தை ஏற்படுத்துவேன்,' 'என்று கூறி விடைபெற்றான்.
 
கலிபுருஷன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான், என்பது நம் எல்லோருக்குமே தெரியும்!

Cheers!