தடைகளைத் தகர்த்தால்...!
ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற அவன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. வீரர்களும் அவனுடன் தங்கினர். மறுநாள், இறைவனை பூஜிக்கத் தயாரானான். ஒரு மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனை சிவலிங்கமாகக் கருதி, காட்டு மலர்களால் பூஜித்தான். பின் தியானத்தில் ஆழ்ந்தான்.
அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்தி வந்தான். அவசரத்தில் மன்னன் வணங்கிக் கொண்டிருந்த மணல்மேட்டின் மேல் கால்பட்டது. மன்னன் இருந்ததையே அவன் கவனிக்கவில்லை. அவனது எண்ணமெல்லாம், மானைப் பிடிப்பதிலேயே இருந்தது.
தன் முன்னால் ஏதோ சத்தம் கேட்டதே என்று கண்விழித்த அரசன், மணல்மேடு கலைந்து கிடந்தது கண்டு கோபமடைந்தான்.
""லிங்கத்தை மிதித்ததோடு, இங்கே ஒருவன் இருப்பதையே சட்டை செய்யாமல் போகிறானே! நான் மன்னன் என்பதாவது அவனுக்குத் தெரியுமா என்ன! ஆணவம் பிடித்த அவனைப் பிடியுங்கள்,'' என்று ஆணையிட்டான். வீரர்கள் பின்னால் ஓடினர்.
ஆனால், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். இதனால் மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது.
வீரர்களை கடிந்து கொண்டான். அவர்கள் தலையைத் தொங்கப்போட்டு கொண்டு நின்றனர். சிறிதுநேரம் கழிந்தது. வேடன், தான் துரத்திய மானை சுமந்து கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்தார்கள் வீரர்கள். அவனைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள்.
அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன்.
""வேந்தே! வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்!'' என்று அரசரைப் பணிந்தான். அவனை எரித்துவிடுபவர்போல் பார்த்தார் மன்னர்.
""இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனாகப் பாவித்து வணங்கிய மணல்மேட்டை மிதித்தாய். என்னை கவனிக்காதவன் போல் அவமானப் படுத்தி போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவுள்ளவன் போல் நடிக்கிறாயா?'' சீற்றமாக கேட்டார்.
""மன்னிக்க வேண்டும் மன்னா! வேட்டையின் போது என் கவனம் முழுவதும் மான் மேல்தான் இருந்தது. ஒருவன் ஒரு தொழிலைச் செய்யும் போது, அதன் மேல் முழுகவனம் வைத்தால் தானே வெற்றி பெறுவான். அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை,''.
வேடனின் பதில் நியாயமானதாக அரசனுக்குப் பட்டது.
அவனது மனதில் ஏதோ உறுத்தியது.
வேட்டையில் இருந்த வேடனின் கவனம் "இரை' மீது குவிந்திருந்திருக்கிறது. ஆனால், தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் "இறை' மீது குவிந்திருக்க வில்லையே.. அதனால் அல்லவா, வேடன் மணல் மேட்டைக் கடந்த போது அவனைக் கவனிக்க முடிந்தது. இந்த வேடனின் தொழில் பக்தியின் முன்னால், என் இறைபக்தி தோற்றுவிட்டதே!
தனக்கு அறிவுப்பாடம் புகட்டிய வேடனுக்கு, அரசன் வெகுமதியளித்து அனுப்பினான். பிறகு மவுனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.
தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால்? புதிய இடம், விலங்குகள் தாக்கிவிடுமோ என்ற பயம்...ஆகா! இடம் எதுவாக இருந்தாலும், இறைவன் நம்மைக் காப்பான் என்ற நம்பிக்கை தவிடு பொடியாகி விட்டதே! ஆம்... பக்தியில் சிரத்தை இல்லாததால் தான் இப்படி நிகழ்ந்தது என புரிந்தது அரசனுக்கு.
இந்த மன்னனைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் லட்சியப் பாதையில் இருந்து, சிறு இடைஞ்சல்களுக்கு அஞ்சி விலகி விடுகிறோம். நம் லட்சியத்துக்குத் தடையாக இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிந்து நீக்கிவிட்டால் போதும், வெற்றி உறுதி.
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.