எல்லாரும் ஒன்று தான்!
லோகசாரங்கர் என்பவர் காவிரியில் புனிதநீர் எடுத்து, ரங்கநாதப்பெருமானுக்கு
திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்ய கொண்டு செல்லும் வழக்கத்தை
மேற்கொண்டிருந்தார். ஜாதியால் பிற்படுத்தப்பட்ட திருப்பாணாழ்வார் தினமும்
கரையில் நின்றபடியே மனக்கண்ணால் ரங்கநாதரைத் தரிசிப்பார். லோகசாரங்கர்
தண்ணீர் எடுத்து வருவதைப் பார்த்தால் ஒதுங்கி நின்று கொள்வார்.
ஒருநாள்,
திருப்பாணாழ்வார் ரங்கநாதரின் சிந்தனையில், தன்னை மறந்து நின்று
கொண்டிருந்தார். லோகசாரங்கர் தூரத்தில் வரும்போதே, அவரை ஒதுங்கி
நிற்கும்படி சப்தமிட்டார்.
தன்னையே மறந்து நின்ற ஆழ்வார், திரும்பக்கூட
இல்லை. உயர்குடியில் பிறந்த தன்னை அவர் அவமதிப்பதாக நினைத்த லோகசாரங்கர்,
கல்லை எடுத்து வீசினார்.
அவரது நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. அந்த
நிலையிலும் கூட அவர் கண்விழிக்கவில்லை. சிந்தனை கலைந்த பிறகு தான் ரத்தம்
வழிவதையே அவர் கவனித்தார்.
சந்நிதிக்குள் சென்ற சாரங்கர் பெருமாளைப் பார்த்தார்.
பெருமாளின்
நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ""என் பக்தனின்
நெற்றியைக் காயப்படுத்தினாயே சாரங்கா!'' என்று அவர் சொல்லவே, லோகசாரங்கர்
அடித்துப் புரண்டு வெளியே வந்தார். திருப்பாணாழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு,
""பெருமாளின் உண்மை பக்தரான உம்மை என் தோளில் சுமந்து சந்நிதிக்கு
அழைத்துச் செல்வேன்,'' என்றார்.
ஆழ்வார் எவ்வளவோ தடுத்தும் அவர்
கேட்கவில்லை. தோளில் சுமந்து சென்றார். பெருமாளைக் கண்ட திருப்பாணாழ்வாரின் மகிழ்ச்சிக்கு எல்லைக்கோடு இருந்திருக்குமா என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.