சுவாமி! கயிலைமலைக்கு வந்து யாத்திரை முடிப்பவர்களுக்கு புண்ணிய கதி
கிடைக்கிறது. காசி வந்து கங்கையில் நீராடி விஸ்வேஸ்வர தரிசனம்
செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கிறது. ஆனால், இப்படி ஏதும் செய்ய
முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்ள
முடியாத பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கதி என்ன?'' என்று சிவனிடம்
கேட்டாள் பார்வதிதேவி.
""உனக்குத் தெரிய வேண்டுமா? என்னுடன் வா!'' என்று காசிக்கு அவளை அழைத்துச்சென்றார் சிவன். பார்வதிதேவி ஒரு மூதாட்டியாக உருவத்தை மாற்றிக் கொண்டாள். சிவபெருமான் தொண்டுக் கிழவரானார். விஸ்வநாதர் கோயில் முன் குறுகலான சந்தில் அவர்கள் நின்றனர்.
கிழவருக்கு மூச்சு
வாங்கியது. மனைவியின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டார். கிழவி போவோர்
வருவோரைப் பார்த்து, ""ஐயா! அம்மா! என் கணவருக்கு உயிர் பிரியும்நிலை
வந்துவிட்டது. யாராவது கொஞ்சம் கங்கை நீர் கொண்டு வந்துவாயில் விடுங்களேன்.
என்னால் எழுந்து போக முடியவில்லையே...'' என்று கை குவித்துக் கெஞ்சினாள்.
யாரும்
உதவ முன்வரவில்லை. எல்லாருக்கும் அவரவர் காரியமே முக்கியமாக இருந்தது.
காசிக்கு வந்தவர்கள் கங்கையில் நீராடப் போனார்கள். கங்கையில் நீராடியவர்கள்
விஸ்வநாதரைத் தரிசனம் செய்யப் போனார்கள். கங்கை நீரைச் செம்பில் கொண்டு
சென்றவர்கள், அதைக் கிழவரின் வாயில் ஊற்றி வீணாக்க விரும்பவில்லை.
இருட்டாகிவிட்டது.
போவோர் வருவோர் குறைந்துவிட்டனர். ஒரு திருடன் வந்தான். அவன் கையில்
இருந்த செம்பில் கங்கை நீர் இருந்தது. கிழவரின் நிலையைப் பார்த்து அவனது
மனம் இரங்கிற்று. காவலர்கள் தன்னை அடையாளம் கண்டு, பிடித்துக் கொள்வார்களே
என்ற பயமிருந்தாலும், மண்டியிட்டு அமர்ந்து கிழவரின் வாயில் கங்கை நீரை
ஊற்றப் போனான்.
"ஐயா! கொஞ்சம் நில்லும். கங்கை ஜலம் ஊற்றியதும் இவரது
உயிர் பிரிந்துவிடும். அதனால், உமது வாழ்க்கையில் செய்த நல்ல காரியம்
ஏதேனும் ஒன்றைச் சொல்லியபடியே, அவர் வாயில் கங்கை நீரை விடும்!'' என்றாள்
கிழவி.
அவன், எவ்வளவு யோசித்தாலும் நல்லது எதையும் நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. அப்படி எதையாவது செய்திருந்தால்தானே? அதேசமயம் பொய் சொல்லவும் மனம் துணியவில்லை.
"அம்மா! நான் இதுவரை நற்செயல் எதையுமே செய்ததில்லை. தீயசெயல்கள் நிறைந்த என் வாழ்க்கையில், முதல் தடவையாக இந்த நல்ல காரியத்தை செய்கிறேன்!'' என்று சொல்லிய படியே வாயில் கங்கை நீரை ஊற்றினான்.
அடுத்த நிமிடம், இறைவனும், அம்பாளும் உருவை மாற்றி, அந்தத் திருடனுக்குத் தரிசனம் கொடுத்தனர்.
"அன்பனே! உனக்கு முக்தி அளிக்கிறேன். உனக்கு அளிக்காமல் வேறு யாருக்கு அளிக்க முடியும்? உன் மனத்தில் இரக்கம் இருந்தது. கையில் கங்கை நீர் இருந்தது. வாக்கில் சத்தியம் இருந்தது. இதைவிட முக்தியைப் பெற வேறு என்ன தகுதி வேண்டும்?'' என்று கூறி மறைந்து போனார்.
ஒரே ஒரு உண்மையான நற்செயல் போதும். சொர்க்கம் கிடைத்து விடும் என்பது பார்வதிதேவிக்கு விளங்கிவிட்டது.
Cheers!
மிகவும் அருமை! நற்செயலே நற்கதிக்கு வழி என்பதை தெளிவாக விளக்கிற்று இந்த கதை! நன்றி!
ReplyDelete