Monday, April 30, 2012

Ancient Stories # 30 - Dirty Cloth

அழுக்குத்துணியிலும் ஆண்டவன்

தயாசிந்து என்ற ஜகந்நாத பக்தர் பூரி நகரில் வசித்தார். 24 மணி நேரமும் அவருக்கு ஜகந்நாதரைப் பற்றிய சிந்தனை தான்!

ஜகந்நாதப் பெருமாளின் புகழ்பரப்பும் பாடல்களைப் பாடியபடியே ஆடுவார். அவரது இசையும்,தாளமும் பக்தர்களையும் நடனமாட வைக்கும். ஏழையாயினும், அவர் மீது பக்தர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். யார் என்ன கொடுத்தாலும் வாங்கமாட்டார்.

அவரது அன்றாட உணவு ஒரு டம்ளர் பால் மட்டுமே! அதையும் யாரும் தானாகக் கொடுத்து பருகமாட்டார். வீடு வீடாகப் போய், ""தாயே! ஒரு டம்ளர் பால் கொடுங்கள்,'' என பிச்சை கேட்பார். கொடுத்தால் குடிப்பார். இல்லாவிட்டால் பட்டினி.

ஒருமுறை, ஒரு வீட்டுவாசலில் நின்று பால் தரும்படி கூவினார். அந்த வீட்டுப்பெண் காலையிலேயே சமையல் முடித்து, கணவரைப் பணிக்கு அனுப்பி விட்டாள். பிள்ளைகளைக் குருகுலத்துக்கு அனுப்ப வேண்டி, அடுத்த சமையல் ஆரம்பமாகியிருந்தது. இதற்கிடையே, ஒரு குழந்தை பண்டம் கேட்டு அவளைப் பாடாய் படுத்தியது. இன்னொன்று, ""அம்மா! பசிக்குது! பாலாவது தாயேன்,'' என்று தொந்தரவு செய்தது.

இந்த நேரத்தில், ஒரு குழந்தை ஏதோ பொருளை வீச, அது அவள் தலையில் பட்டு "விண்' என வலித்தது. அந்தக் குழந்தையை நையப் புடைத்துக் கொண்டிருந்த வேளையில் தான், தயாசிந்து பிச்சை கேட்டு நின்றார்.

"போய்யா! போ! உங்களுக்கெல்லாம் வேறு இல்லையா! உழைத்துப் பிழைக்க வேண்டியது தானே! சோம்பேறி! இங்கே மனுஷி பாடாத பாடு படுகிறாள். இதில், நீர் வேறு பிராணனை வாங்குகிறீர்! ஓடிப்போ!'' என்றவள், கையில் இருந்த வீடு துடைக்கும் அழுக்குத் துணியை வீசினாள்.

அது தயாசிந்துவின் முகத்தில் வந்து விழுந்தது.

தயாசிந்து சந்தோஷப்பட்டார். ""இன்று பரந்தாமன் பாலுக்குப் பதிலாக அழுக்குத்துணியைத் தந்திருக்கிறான். இதுவும் கூட நல்லதுக்கு தான்,'' என்று எண்ணியவர், நேராக ஆற்றுக்குச் சென்றார். துவைத்துக் காய வைத்தார்.

அதை திரிதிரியாக கிழித்தார். அங்கே நெய் சர்வசாதாரணமாக கிடைக்கும். நெய்யுடனும், திரியுடனும் ஜகந்நாதர் கோயிலுக்குப் போனார். ஜகந்நாதருக்கு தீபம் ஏற்றினார். இவர் இங்கே தீபம் ஏற்றினாரோ இல்லையோ...அந்தப் பெண்ணின் கண்களில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தது.

"ஆ...இது ஜகந்நாதரின் சிற்பமல்லவா! ஜகந்நாதா! நீயா என் இல்லம் தேடி வந்தாய்! நான் கோபக்காரியாயிற்றே! கோபமுள்ள இடத்திற்கு தெய்வம் வராதே. ஆனாலும், எப்படி வந்தாய்?'' அவள் சந்தேகத்துடன் கோயிலை நோக்கி ஓடினாள்.

தான் தூக்கி எறிந்த துணியைத் துவைத்து திரியாக்கி, நெய் தீபம் ஏற்றிய விபரத்தை அறிந்தாள். பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டாள். தயாசிந்துவின் கால்களில் விழுந்து, ""மகானே! தங்கள் பெருமை அறியாமல் தங்களை அவமானப்படுத்தி விட்டேன், மன்னியுங்கள்,'' என்றாள். சுற்றியிருந்தவர்கள் இதுகேட்டு உருகி நின்றனர்.

அவர் சிரித்தார்.

"அம்மா! இத்தனை நாள் பக்தி செலுத்திய என் கண்களுக்கு கூட அந்த பரந்தாமன் காட்சியளிக்கவில்லை. ஆனால், உன் கரித்துணிக்கு மயங்கி அந்த கருங்கண்ணன், உனக்கு காட்சியளித்தானே! உன் மூலம் என் புகழ் பரவ அவன் வழி வகுத்தான்,'' என்று நா ததும்பச் சொன்னார்.

அன்று முதல், தயாசிந்துவின் சிஷ்யை ஆனாள் அந்தப் பெண்.

Cheers!


No comments:

Post a Comment

I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.