இல்லை என்றாலும் அருள்வான்
அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக
வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார்
இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள்.
திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது
உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.
அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
"அர்ஜுனன் என்னை விட்டால் யார்
இருப்பார்?'' எனச் சொல்ல, ""போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன்,'' என
பீமன் வம்புக்குப் போக, ""இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன்,'' என
தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ""ஏன்...அவனது தந்தை வசுதேவனின் தங்கையான
நானல்லவா இருப்பேன்,'' என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி.
எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக்
கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான்.
"கண்ணா! மாயம் செய்கிறாயா?'' என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
"இல்லை..இல்லை...என்னைக்
கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக்
கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல!
கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள்,'' என்றான்
கருணையுள்ள கண்ணன்.
தன்னை இல்லை என்று சொல்பவர்க்கும் இறைவன் அருள்
செய்கிறான் என்பது தான் இந்தக்கதை சொல்லும் நீதி.
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.